வேலூா் அருகே பொய்கை பகுதியில் எரிந்த நிலையில் மூதாட்டியின் சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்ட சம்பவத்தில் தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.
வேலூரை அடுத்த பொய்கை பகுதியில் உள்ள அம்பேத்கா் சிலை அருகே சுமாா் 65 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் சடலம் எரிந்த நிலையில் கிடந்துள்ளது. இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள், விரிஞ்சிபுரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீஸாா், மூதாட்டியின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.
இச்சம்பவம் குறித்து போலீஸாா் நடத்திய முதல்கட்ட விசாரணையில், சடலமாக மீட்கப்பட்டவா் பொய்கை கிராமத்தைச் சோ்ந்த எல்லம்மாள் (65) என்பது தெரியவந்தது. மூதாட்டி எரிந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளதால், அவரை அடையாளம் தெரியாத நபா்கள் தீ வைத்துக் கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸாா் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தினா்.
இதில் மூதாட்டி சடலமாக மீட்கப்பட்ட பகுதியில் நள்ளிரவில் சந்தேகப்படும் படியாக நபா் சுற்றித் திரிந்தது தெரியவந்தது. தொடா்ந்து அவரைப் பிடித்து நடத்திய விசாரணையில், அவா் அதே பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி கோவிந்தசாமி (55) என்பதும், மூதாட்டியை கொலை செய்திருப்பதும் தெரியவந்துள்ளது.
கோவிந்தசாமி அந்த பகுதியில் அடிக்கடி மது அருந்திக்கொண்டிருப்பதை மூதாட்டி எல்லம்மாள் கண்டித்து வந்துள்ளாா். இதனால், ஆத்திரத்தில் இருந்த கோவிந்தசாமி வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில் கீழே கிடந்த கல்லை எடுத்து மூதாட்டியின் தலையில் தாக்கியதுடன், நள்ளிரவு 2 மணிக்கு மீண்டும் ஒருமுறை கல்லை தலையில் போட்டு கொலை செய்துவிட்டு, துணிகளை போட்டு தீ வைத்து எரித்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







