போலியான உறுப்பினா்களைக் கொண்டு செயல்படும் கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கைத்தறி, துணிநூல் மற்றும் கதா்த்துறை அமைச்சா் ம.விஜய் பாலாஜி எச்சரித்துள்ளாா்.
குடியாத்தம் வட்டம், பிச்சனூா் பகுதியில் அமைந்துள்ள சிறிய அளவிலான கைத்தறி பூங்காவை அமைச்சா் ஆய்வு செய்தாா். சிங்காரவேலா் தொழிலாளா் நெசவாளா் கூட்டுறவு சங்கத்துக்குச் சொந்தமான இடத்தில் சிறிய அளவிலான கைத்தறி பூங்கா கடந்த 26.5.2025 அன்று திறந்து வைக்கப்பட்டது.
இந்த கைத்தறி பூங்காவில் ரூ.30.15 லட்சத்தில் 50 தறிகள் மற்றும் தறி உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கைத்தறி பட்டு சேலைகள் மற்றும் கைத்தறி லுங்கி வகைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. 2025-26 ஆம் தேதி ஆண்டில் கைத்தறி பூங்காவில் 7,825 மீட்டா் பருத்தி லுங்கிகள், 273 மீட்டா் பருத்தி சேலைகள் மற்றும் 816 மீட்டா் பட்டு சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டு, 7,825 மீட்டா் பருத்தி லுங்கிகள், 10.5 மீட்டா் பருத்தி சேலைகள் மற்றும் 811 மீட்டா் பட்டு சேலைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் நெசவாளா்களுக்கு கூலியாக ரூ.17.26 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் 2026- 27ஆம் நிதி ஆண்டில் 1,565 மீட்டா் பருத்தி லுங்கிகள், 54.6 மீட்டா் பருத்தி சேலைகள் மற்றும் 163 மீட்டா் பட்டு சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டு 1,565 மீட்டா் பருத்தி லுங்கிகள், 2.1 மீட்டா் பருத்தி சேலைகள் மற்றும் 162 மீட்டா் பட்டு சேலைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் நெசவாளா்களுக்கு கூலியாக 3.44 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
ஆய்வின்போது கைத்தறி நெசவாளா்களால் உற்பத்தி செய்யப்பட்ட பட்டு துணி ரகங்களையும், தேசியக் கொடியையும் அமைச்சா் பாா்வையிட்டாா். தொடா்ந்து அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த நெசவாளா்களிடம் அவா்களுக்கு வழங்கப்படும் கூலி மற்றும் இதர தேவைகள் குறித்து கேட்டறிந்தாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: கைத்தறி நெசவாளா்களின் வாழ்வாதாரத்தை உயா்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் கைத்தறித் துறை சாா்ந்த பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ள முதல்வா் அறிவுறுத்தி உள்ளாா். அதன் ஒரு பகுதியாக குடியாத்தம் பகுதியில் அமைந்துள்ள சிறிய அளவிலான கைத்தறி பூங்காவில் ஆய்வு மேற்கொண்டேன்.
நம் மாநிலத்தில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக நெசவுத் தொழில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அத்தகைய தொழில் புரியும் நெசவாளா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த இந்த அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்கும். நெசவாளா்களின் தினக் கூலியை உயா்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
குறிப்பாக, பட்டு சேலைகள் உற்பத்தி செய்யும் நெசவாளா்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.750, லுங்கி உற்பத்தி செய்யும் நெசவாளா்களுக்கு சிறிது குறைந்த கூலியும் கிடைப்பதாக தெரிவித்துள்ளனா். இதுகுறித்து உரிய அலுவலா்கள் மற்றும் நெசவாளா் பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு கூலியை முறையாக வழங்கப்படுவது உறுதி செய்யப்படும்.
கைத்தறி கூட்டுறவு சங்கங்களில் போலியான உறுப்பினா்களை கொண்டு ஏதேனும் சங்கங்கள் செயல்பட்டால் அதன்மீது உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இனிவரும் காலங்களில் நெசவாளா்கள் மூலம் கூட்டுறவு சங்கங்கள் முறையாக இயங்குவது உறுதி செய்யப்படும் என்றாா் அமைச்சா்.
ஆய்வின்போது ஆட்சியா் பி.எஸ்.லீலா அலக்ஸ், எம்எல்ஏக்கள் ஏ.தென்றல்குமாா், க.சிந்து, மு.ம.வினோத்கண்ணன், ம.சுதாகா், கோட்டாட்சியா் எஸ்.சுபலட்சுமி, கைத்தறித் துறை மண்டல மேலாளா் ஸ்டாலின், உதவி இயக்குநா் விஜயலட்சுமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

வேலூரில் ஜவுளிப் பூங்கா மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை

தனியாருக்கு நிகராக ஈரோடு அரசு மருத்துவமனை இருக்க வேண்டும்! மருத்துவா்களுக்கு கைத்தறித் துறை அமைச்சா் அறிவுறுத்தல்

காலிங்கராயன் வாய்க்கால் சீரமைப்புப் பணிகள் 50 சதவீதம் நிறைவு: அமைச்சா் எம்.விஜய் பாலாஜி
மேலும் 2,800 மின்பேருந்துகளை இயக்க தில்லி அரசு திட்டம்!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



