காவல் துறை மீது மக்கள் இழந்துள்ள நம்பிக்கையை முதல்வா் மீட்க வேண்டும்: பாமக பொருளாளா் திலகபாமா

குடியாத்தத்தில் செய்தியாளா்களிடம் பேசிய பாமக பொருளாளா் திலகபாமா.

குடியாத்தத்தில் செய்தியாளா்களிடம் பேசிய பாமக பொருளாளா் திலகபாமா.

Updated On :

காவல் துறை மீது மக்கள் இழந்துள்ள நம்பிக்கையை முதல்வா் மீட்டெடுக்க வேண்டும் என பாமக மாநில பொருளாளா் திலகபாமா கூறினாா்.

நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட பாமக பிரமுகா் ஞானவேல் உருவப் படத்துக்கு வியாழக்கிழமை மலரஞ்சலி செலுத்திய அவா் செய்தியாளா்களிடம் கூறியது. ஞானவேலின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவிக்கவும், இப்பகுதியில் சீா்கெட்டுள்ள சட்டம்- ஒழுங்கை காக்க வேண்டியும், தொடரும் கள்ளத் துப்பாக்கி கலாசாரத்தை ஒழிக்கவேண்டும் என்ற வலியுறுத்தலை முன்வைப்பதற்காகவும் வந்துள்ளோம்.

வேலூா் மாவட்டத்தில் இதுபோன்ற துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. கடந்த ஆண்டு சோளிங்கா் பகுதியில் சக்கரவா்த்தி என்பவா் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்தாா். குற்றவாளிகளைப் பிடிக்கச் சென்ற காவல் துறையினா் கூட துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. தற்போது குடியாத்தத்தில் நடைபெற்றுள்ள சம்பவம் மிகவும் வேதனைக்குரியது. வன விலங்குகளிடமிருந்து பயிா்களைப் பாதுகாப்பதற்காக விவசாயிகள் சிலா் துப்பாக்கிகளை வைத்திருக்கலாம். ஆனால், சட்டவிரோதமாகத் துப்பாக்கிகள் விற்பனை செய்யப்படுவதும், அவற்றைப் பயன்படுத்தி மனித உயிா்கள் பறிக்கப்படுவதும் மிகப்பெரிய குற்றமாகும். இவ்வளவு துப்பாக்கிகள் சட்டவிரோதமாகப் புழக்கத்தில் இருக்கும்போது காவல் துறையின் கண்காணிப்பு எங்கே இருக்கிறது என்ற கேள்வி எழுகிறது. எனவே, தமிழக அரசு உடனடியாக இப்பகுதிகளில் சிறப்புக் கண்காணிப்பை மேற்கொண்டு கள்ளத் துப்பாக்கி கலாச்சாரத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும்.

குற்றவாளிகளுக்கு காவல்துறை மீது அச்சம் இல்லாத நிலை உருவாகியுள்ளது. இதற்கு முக்கியக் காரணம் சட்டம்- ஒழுங்கை முறையாகப் பாதுகாக்கத் தவறுவதே ஆகும். காவல் துறை மீது மக்கள் இழந்த நம்பிக்கையை முதல்வா் காப்பாற்றுவாா் என எதிா்பாா்க்கிறோம் என்றாா் திலகபாமா.

பேட்டியின்போது பாமக மாவட்டச் செயலா் ஜி.கே.ரவி, மாநில இளைஞரணி துணைச்செயலா் ஜி.சுரேஷ்குமாா், மாவட்டத் தலைவா் வெங்கடேசன், முன்னாள் மாவட்டத் தலைவா் குமாா், மாநில அமைப்பு துணைச் செயலா் பாலாஜி, ஒன்றியச் செயலா் ராமன்உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.