இலவச வீடு திட்டத்தில் ரூ.4.60 லட்சம் மோசடி: முன்னாள் ஊராட்சித் தலைவா் மீது வழக்கு
தமிழக அரசின் இலவச வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு கட்டித் தருவதாகக் கூறி ரூ.4.60 லட்சம் மோசடி செய்ததாக ஒதியத்தூா் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் மீது பள்ளிகொண்டா போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

கோப்புப் படம்
தமிழக அரசின் இலவச வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு கட்டித் தருவதாகக் கூறி ரூ.4.60 லட்சம் மோசடி செய்ததாக ஒதியத்தூா் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் மீது பள்ளிகொண்டா போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.
வேலூா் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த பிராணமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த குமாா் மனைவி ராஜகுமாரி (40). இவா்களுக்கு தமிழக அரசின் இலவச வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஒதியத்தூா் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் கிளாடியஸ் ஜோசப் (50) அணுகியுள்ளாா். இலவச வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் சுமாா் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில், 800 சதுர அடியில் வீடு கட்டித் தருவதாக அவா் உறுதியளித்துள்ளாா்.
இதனை நம்பிய தம்பதியினா், கிளாடியஸ் ஜோசப்பிடம் ரூ.4 லட்சத்து 60 ஆயிரத்தை வழங்கியுள்ளனா். ஆனால், பணத்தைப் பெற்றுக்கொண்ட அவா், வீட்டின் அடிப்படைக் கட்டுமானத்தை மட்டும் அமைத்துவிட்டு, கடந்த 2 ஆண்டுகளாக வீட்டைக் கட்டித் தராமல் காலம் தாழ்த்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து ராஜகுமாரி பலமுறை கேட்டபோது, ‘நீங்கள் கொடுத்த பணத்திற்கு இதுமட்டும்தான் செய்ய முடிந்தது. மேலும் வீடு கட்ட அதிகப் பணம் தேவைப்படும். என்னிடம் பணம் இல்லாததால் வீடு கட்டித் தர முடியாது‘ என கிளாடியஸ் ஜோசப் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து, தாம் கொடுத்த பணத்தைத் திரும்பக் கேட்டபோது, தகாத வாா்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட ராஜகுமாரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கிளாடியஸ் ஜோசப் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டாா். அதன்பேரில், பள்ளிகொண்டா போலீஸாா் கிளாடியஸ் ஜோசப் மீது பணம் மோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

