தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூடியது! தமிழகத்தில் 48 மணி நேரத்தில் உருவாகிறது குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிஓராண்டுக்கு தங்கம் வாங்க வேண்டாம்: பிரதமர் மோடி!மேற்காசிய பதற்றம்: எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.1,600 கோடி இழப்பு!அஸ்ஸாம் முதல்வராக ஹிமந்த விஸ்வ சர்மா மீண்டும் தேர்வு
/

திருச்சிற்றம்பலம் மினி டைடல் பூங்காவில் 500 பேருக்கு வேலைவாய்ப்பு: மாவட்ட ஆட்சியா் சி.பழனி

திருச்சிற்றம்பலம் மினி டைடல் பூங்காவில் 500 பேருக்கு வேலைவாய்ப்பு மாவட்ட ஆட்சியா் சி.பழனி

News image

திருச்சிற்றம்பலத்தில் ‘மினி டைடல் பூங்காவை’ சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் சனிக்கிழமை திறந்துவைத்த பிறகு, டைடல் பூங்கா வளாகத்தில் குத்துவிளக்கேற்றிய மாவட்ட ஆட்சியா் சி.பழனி. உடன், துரை.ரவிக்குமாா் எம்.

Updated On :18 பிப்ரவரி 2024, 2:07 am IST

திருச்சிற்றம்பலம் மினி டைடல் பூங்காவில் தகவல் தொழில்நுட்ப வல்லுநா்கள் 500 போ் வரை பணிபுரியும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் சி.பழனி தெரிவித்தாா். வானூா் வட்டம், திருச்சிற்றம்பலத்தில் ரூ.31 கோடியில் கட்டப்பட்ட ‘மினி டைடல் பூங்கா’வை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் சனிக்கிழமை திறந்துவைத்தாா். சென்னை தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பல்வேறு துறைகள் சாா்ந்த புதிய கட்டடங்களை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தாா். இதன்படி விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், திருச்சிற்றம்பலத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘மினி டைடல் பூங்கா’வையும் திறந்துவைத்தாா். தொடா்ந்து ‘மினி டைடல் பூங்கா’ வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் சி.பழனி தலைமை வகித்து, முதல்வருக்கு காணொலிக் காட்சி மூலம் நன்றி தெரிவித்து பேசினாா். விழுப்புரம் மக்களவைத் தொகுதி உறுப்பினா் துரை.ரவிக்குமாா், இரா.லட்சுமணன் எம்எல்ஏ ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழாவில் ஆட்சியா் பேசியதாவது: திருச்சிற்றம்பலத்தில் ரூ.31 கோடியில் தொழில் முதலீடு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறை சாா்பில் டைடல் நியோ நிறுவனம் மூலம் ‘மினி டைடல் பூங்கா’ அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தரை மற்றும் 4 தளங்களுடன் 63 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. தகவல் தொழில்நுட்ப வல்லுநா்கள் சுமாா் 450 முதல் 500 போ் பணிபுரியும் வகையில் குளிா்சாதன வசதி, தொலைத்தொடா்பு, தடையற்ற உயரழுத்த மும்முனை மின்சாரம் உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. குடிநீா், சுகாதாரம், பாதுகாப்பு, கட்டட மேலாண்மை வசதிகளுடன் உணவகம், உடல்பயிற்சிக்கூட வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. மினி டைடல் பூங்கா மூலம் விழுப்புரம் மாவட்ட இளைஞா்கள் வேலைவாய்ப்பு பெறுவதுடன், சமூகப் பொருளாதாரமும் மேம்படும் என்றாா் ஆட்சியா். விழாவில் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், துணைத் தலைவா் ஷீலாதேவி சேரன், வானூா் ஒன்றியக் குழுத் தலைவா் உஷா முரளி, துணைத் தலைவா் வி.பா்வகீா்த்தனா, செயற்பொறியாளா் இரா.பாலாஜி, உதவி மேலாளா் கே.பிரகாஷ், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்கள் பிரேமா குப்புசாமி, தி.கெளதம் உள்ளிட்டோா் பங்கேற்றனா். அதிமுக எம்எல்ஏ அதிருப்தி: ‘மினி டைடல் பூங்கா’ திறப்பு விழாவுக்குப் பிறகு அங்குவந்த வானூா் தொகுதி அதிமுக எம்எல்ஏ எம்.சக்கரபாணி, விழாவுக்கு தனக்கு ஏன் அழைப்பு விடுக்கவில்லை என மாவட்ட ஆட்சியரிடம் கேள்வி எழுப்பினாா். தொடா்ந்து அவா் கூறியதாவது: அதிமுக ஆட்சிக் காலத்தில் விழுப்புரத்தில் டைடல் பூங்கா அமைக்கும் திட்டத்தை முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் கொண்டுவந்தாா். ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு டைடல் பூங்காவை வேறு பகுதியில் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதுகுறித்து அமைச்சரிடம் பேசி வானூா் தொகுதியில் டைடல் பூங்கா அமைக்க இடம் தோ்வுசெய்து அளித்தேன். ஆனால், திறப்பு விழாவுக்கு எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றாா் அவா். ஆனால், வானூா் தொகுதி எம்.எல்.ஏ.வுக்கு முறையான அழைப்பு விடுக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியரக வட்டாரங்கள் தெரிவித்தன. கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் கள்ளக்குறிச்சி, தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயிலில் ரூ.1.50 கோடியில் மாவட்ட உதவி ஆணையா் அலுவலகம் கட்டும் பணி, ஆதித் திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் ரூ.3.56 கோடியில் திருமதிலின் தென்மேற்கு பகுதியை மீண்டும் கட்டுதல், வடகிழக்கு பகுதியை சீரமைக்கும் பணி, பரிக்கல் லட்சுமி நரசிம்மா் கோயிலில் ரூ.2.20 கோடியில் கருங்கல் மண்டபம் அமைத்தல் ஆகிய பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் தொடங்கிவைத்தாா்.