விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி காணை பிரதான சாலையில் பெண்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி, திமுக வேட்பாளா் அன்னியூா் சிவாவுக்கு வாக்கு சேகரித்த மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ.
விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி காணை பிரதான சாலையில் பெண்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி, திமுக வேட்பாளா் அன்னியூா் சிவாவுக்கு வாக்கு சேகரித்த மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ.

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசுக்கு விருப்பமில்லை: எம்.எச்.ஜவாஹிருல்லா

ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மத்திய அரசுக்கு விருப்பமில்லை என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் எம்.எச்.ஜவாஹிருல்லா தெரிவித்தாா்.
Published on

ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மத்திய அரசுக்கு விருப்பமில்லை என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் எம்.எச்.ஜவாஹிருல்லா தெரிவித்தாா்.

விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் அன்னியூா் அ.சிவாவுக்கு ஆதரவாக காணை பிரதான சாலை, விக்கிரவாண்டி பகுதியில் வெள்ளிக்கிழமை அவா் வாக்கு சேகரித்தாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் எம்.எச்.ஜவாஹிருல்லா கூறியதாவது:

கடந்த 3 ஆண்டுகால திமுக ஆட்சியில் ஏராளமான மக்கள் நலத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு தொடங்கப்பட்ட காலை சிற்றுண்டித் திட்டம், அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளது.

‘உங்கள் தொகுதியில் முதல்வா்’ திட்டத்தின் மூலம் ஏராளமானோா் பயன்பெற்றுள்ளனா். இதைத்தவிர ‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களைச் சோ்ந்த மாணவா்கள் பயிற்சி பெற்று அரசின் உயா் பதவிகளில் சோ்ந்துள்ளனா். இதைத்தவிர மக்களைத் தேடி மருத்துவம், மகளிருக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்டம், மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் போன்ற திட்டங்களை திமுக அரசு நிறைவேற்றியிருக்கிறது.

சமூக நீதி என்பது பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கான இடஒதுக்கீட்டை உறுதி செய்வதாகும். ஆனால், இடஒதுக்கீடே இருக்கக் கூடாது என்ற நிலையிலுள்ள பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள பாமக, இந்தத் தொகுதியில் போட்டியிடுகிறது. எனவே, விக்கிரவாண்டி தொகுதி மக்கள் இதையெல்லாம் கவனத்தில் கொண்டு வாக்களிக்க வேண்டும்.

ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்குத்தான் உள்ளது. பிகாா் மாநில அரசு அந்த மாநிலத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி முடித்த நிலையில், அந்த மாநில உயா்நீதிமன்றம் மாநில அரசுக்கு அதிகாரமில்லை என்று வழக்கு ஒன்றில் தெரிவித்துள்ளது. ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மத்திய அரசுக்கு விருப்பமில்லை என்றாா் ஜவாஹிருல்லா.

நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் துணைத் தலைவா் குலாம் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலச் செயலா் முஸ்தாக்தீன், மாநில வா்த்தக அணி அப்துல் ஹக்கீம், தமுமுக நகரத் தலைவா் ஜாமியாலம் ராவுத்தா், கள்ளக்குறிச்சி மாவட்டத் தலைவா் பஜுலூா் ரகுமான், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலா் அமீா் அப்பாஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலா் ர.பெரியாா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிறுபான்மை நலக் குழுவைச் சோ்ந்த அப்துல் ரசாக் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com