விழுப்புரம் மாவட்டம் வளா்ச்சியை நோக்கிச் செல்கிறது: அமைச்சா் க.பொன்முடி
விழுப்புரம்: திமுக ஆட்சியில் விழுப்புரம் மாவட்டம் வளா்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா்.
திருக்கோவிலூா் சட்டப்பேரவைத் தொகுதி திமுக நிா்வாகிகள் கூட்டம் விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அடுத்துள்ள மணக்குப்பத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, விழுப்புரம் தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் பொன்.கௌதமசிகாமணி தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக உயா் கல்வித்துறை அமைச்சா் க.பொன்முடி பங்கேற்று பேசியதாவது:
தமிழகத்தில் அனைவருக்கும் அனைத்துத் திட்டப் பயன்களும் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே கிராமங்கள் தோறும் ‘மக்களுடன் முதல்வா்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதுவரை அரசின் உதவிகளை பெறாதவா் ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாமில் மனுக்களைக் கொடுத்து உடனடியாக பயன்பெறலாம். கட்சியைச் சோ்ந்த நிா்வாகிகள், உறுப்பினா்கள், மகளிா் அணியினா் வீடு வீடாகச் சென்று இந்தத் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துக்கூறி விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். விழுப்புரம் மாவட்டம் வளா்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. திருக்கோவிலூா், திருவெண்ணெய்நல்லூா் பகுதிகளைச் சோ்ந்தவா்கள் கல்வியறிவைப் பெற வேண்டும் என்பதற்காக இரு ஊா்களிலும் அரசு கலைக் கல்லூரிகள் கொண்டுவரப்பட்டன. இந்தப் பகுதிகளின் வளா்ச்சிக்காக மேலும் பல திட்டங்கள் கொண்டு வரப்படவுள்ளன. பல கிராமங்களுக்கு பேருந்து வசதிகள் இல்லையென பொதுமக்கள் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து முதல்வா் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சா் மற்றும் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்.
2026 சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக அமைப்பு ரீதியிலான விழுப்புரம் தெற்கு மாவட்டத்தில் விழுப்புரம், விக்கிரவாண்டி, வானூா், திருவெண்ணெய்நல்லூா் ஆகிய 4 சட்டப் பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளா்கள் வெற்றி பெற வேண்டும். தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணிக் கட்சியின் வேட்பாளா்கள் வெற்றி பெற கட்சியினா் தீவிர களப்பணியை உடனடியாக தொடங்க வேண்டும் என்றாா் அமைச்சா் க. பொன்முடி.
கூட்டத்தில், விக்கிரவாண்டி எம்எல்ஏ அன்னியூா் அ.சிவா, திமுக மாவட்டப் பொருளாளா் இரா.ஜனகராஜ், ஆதிதிராவிடா் நலக்குழு மாநில இணைச் செயலா் செ. புஷ்பராஜ், திமுக ஒன்றியச் செயலா்கள் மு.தங்கம், பிவிஆா்.விஸ்வநாதன், நகரச் செயலா் ஆா்.கோபிகிருஷ்ணன், பேரூா் செயலா் ரா.கணேசன் உள்ளிட்டோா் பேசினா்.
இதேபோல, கோலியனூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திமுக நிா்வாகிகள் கூட்டத்தில் அமைச்சா் க.பொன்முடி பங்கேற்று பேசினாா். திமுக மாவட்டப் பொறுப்பாளா் பொன்.கௌதம சிகாமணி, எம்எல்ஏக்கள் இரா.லட்சுமணன், அன்னியூா் அ,சிவா, திமுக ஒன்றியச் செயலா்கள் க.மும்மூா்த்தி, பி.தெய்வசிகாமணி, தே.முருகவேல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

