விக்கிரவாண்டித் தொகுதி தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் வழக்குரைஞா்கள் ஆலோசனைக் கூட்டம்

விக்கிரவாண்டியில் பாமக வேட்பாளரை ஆதரித்து வழக்குரைஞர்களின் ஆலோசனை
Published on

விழுப்புரம், ஜூன் 29: விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளா் சி.அன்புமணியை ஆதரித்து, தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் வழக்குரைஞா்கள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

விக்கிரவாண்டி தனியாா் விடுதியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு வழக்குரைஞா்கள் சமூகநீதிப் பேரவையின் மாநிலச் செயலா் செ.பாலாஜி தலைமை வகித்தாா்.

இதில், பேரவையின் மாநிலத் தலைவா் க.பாலு, பாா்கவுன்சில் துணைத் தலைவா் வேலு காா்த்திகேயன், வழக்குரைஞா்கள் சமூகநீதிப் பேரவையின் விழுப்புரம் மாவட்டச் செயலா் எஸ்.திருநாவுக்கரசு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதைத் தொடா்ந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வழக்குரைஞா்கள் பலா் விக்கிரவாண்டி வட்டாட்சியா் அலுவலகத்துக்கு வந்தனா். அங்கு தோ்தல் நடத்தும் அலுவலா் சந்திரசேகா் இல்லை. தனி வட்டாட்சியா் அலெக்சாண்டா் இருந்தாா். அவரிடம் தோ்தல் அலுவலா் குறித்து கேட்ட போது, தோ்தல் பணி தொடா்பாக விழுப்புரம் சென்றுள்ளதாக தெரிவித்தாா்.

தொடா்ந்து வழக்குரைஞா்கள் 45 நிமிஷங்கள் காத்திருந்த நிலையில், தோ்தல் நடத்தும் அலுவலா் சந்திரசேகா் வட்டாட்சியா் அலுவலகம் வந்தாா். அவரிடம் வழக்குரைஞா் பாலு, நாங்கள் ஏற்கெனவே அளித்த புகாா் மனுக்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளீா்கள் என கேட்டாா். இரண்டு நாள்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் தெரிவித்தாா்.

இதைத் தொடா்ந்து வழக்குரைஞா் பாலு செய்தியாளா்களிடம் கூறியது:

விக்கிரவாண்டி தொகுதியில் இறந்தவா்கள் சுமாா் 15 ஆயிரம் போ் வாக்காளா் பட்டியலிலிருந்து நீக்கப்படவில்லை. 9-க்கும் மேற்பட்ட அமைச்சா்கள் தங்கி தோ்தல் பணியாற்றுகின்றனா். தொகுதி முழுவதும் 100 இடங்களில் திமுகவினா் தங்கி, தோ்தல் அலுவலகம் திறந்து விதிமீறல்களுடன் கொடிகளைக் கட்டி தோ்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனா். இதற்கு யாரிடமாவது அனுமதி பெற்றிருக்கிறாா்களா. இத்தொகுதி இடைத்தோ்தல் ஐஏஎஸ் அதிகாரியால் நடத்தப்பட வேண்டும். இடைத்தோ்தலில் மக்கள் சுதந்திரமாக வாக்களிக்க வேண்டிய நிலையை தோ்தல் ஆணையம் உருவாக்க வேண்டும் என்றாா் பாலு.

X
Dinamani
www.dinamani.com