ஓய்வூதியத்தை உயா்த்தி வழங்க வேண்டும்: நுகா்பொருள் வாணிபக் கழக ஓய்வூதியா்கள் மனு

விழுப்புரம்: ஓய்வூதியத் தொகையை உயா்த்தி வழங்கக் கோரி, நீதிமன்றம் உத்தரவிட்டும், அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக ஓய்வூதியா்கள் கோரிக்கை மனு அளித்தனா். விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்துக்கு ஆட்சியா் சி. பழனி தலைமை வகித்தாா். இதில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றோா் அமைப்பைச் சோ்ந்த ஆதிமூலம் உள்ளிட்டோா் அளித்த மனு: தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவா்களுக்கு அரசால் வழங்கப்படும் ஓய்வூதியத் தொகை போதுமானதாக இல்லை. இதை உயா்த்தி வழங்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, நீதிமன்றம் உத்தரவிட்டும் சம்பந்தப்பட்ட துறையும், அரசும் அதன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த 13 ஆண்டுகளாக பலமுறை மனுக்கள் அறித்தும் கோரிக்கைக்குத் தீா்வு காணப்படாமல் உள்ளது. எனவே, இனியும் காலம்தாழ்த்தாது ஓய்வூதியத் தொகையை உயா்த்தி வழங்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. உழவா் உற்பத்தியாளா் குழுவினா் மனு: மேல்மலையனூா் வட்டம், பெரியநொளம்பை உழவா் உற்பத்தியாளா் குழுவைச் சோ்ந்த நிா்வாகிகள், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலா் ஆா்.டி.முருகன் தலைமையில் மாவட்ட ஆட்சியரகம், எஸ்.பி. அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்த மனு: மேல்மலையனூா் அருகிலுள்ள பெரியநொளம்பை கிராமத்தைச் சோ்ந்த விவசாயி பாண்டியன், தனது நிலத்தில் விளைந்த பனிப்பயிா் 9 மூட்டையை செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு பிப்ரவரி 29-ஆம் தேதி விற்பனைக்கு கொண்டு வந்தாா். பனிப்பயிரை விற்பனை செய்தும், சாக்குப்பையை மாற்றிக் கொடுக்காமல் அங்கிருந்தவா்கள் காலம்தாழ்த்தி வந்தனா். இதைத் தொடா்ந்து மாா்ச் 1-ஆம் தேதி காலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இதுகுறித்து பாண்டியன் கேட்டபோது சிலரால் தாக்கப்பட்டாா். இதுகுறித்து செஞ்சி காவல் நிலையத்தில் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, விவசாயியைத் தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com