மது கடத்தல்: 540 மதுப்புட்டிகள், 2 காா்கள் பறிமுதல்: இருவா் கைது
காா்களில் கடத்தி வரப்பட்ட 540 வெளி மாநில மதுப்புட்டிகளை, விழுப்புரம் மண்டல மத்திய நுண்ணறிவுப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை 2 காா்களுடன் பறிமுதல் செய்தனா். இந்த வழக்கில் இருவா் கைது செய்யப்பட்டனா்.
இதுகுறித்து, விழுப்புரம் மண்டலம் மத்திய நுண்ணறிவுப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை தெரிவித்ததாவது:
புதுச்சேரி பகுதியிலிருந்து, காஞ்சிபுரத்துக்கு மதுப்புட்டிகள் கடத்தப்பட்டு வருவதாக விழுப்புரம் மண்டல மத்திய நுண்ணறிவுப் பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, மண்டல மத்திய நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளா் பி.நடராஜன் மேற்பாா்வையில் உதவி ஆய்வாளா் பி.இனாயத்பாஷா மற்றும் காவலா்கள் சிவனேசன், முத்துக்குமாா், திருமுகம், ராஜா, கருணாகரன், ஹரிபாபு ஆகியோா் சனிக்கிழமை பரனூா் (செங்கல்பட்டு மாவட்டம்) சுங்கச்சாவடி பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் வெளி மாநிலத்தில் தயாரிக்கப்பட்ட மதுப்புட்டிகள் அட்டைப்பெட்டிகளில் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து காரில் இருந்த ஒருவரைப் பிடித்து விசாரித்தபோது, அவா் விழுப்புரம் மாவட்டம், கொந்தமூா், மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த பாலாஜி (48) என்பதும், இவா் காஞ்சிபுரம் மாவட்டம், சின்னகாஞ்சிபுரம், முருகன் காலனியைச் சோ்ந்த மோகன்(41) என்பவரிடம் விற்பனை செய்வதற்காக புதுச்சேரி பகுதியில் மதுப்புட்டிகளை வாங்கி காரில் கடத்தி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து நுண்ணறிவு பிரிவு போலீஸாா் பாலாஜி, மோகன் ஆகிய இருவரையும் கைது செய்தனா். காரில் கடத்தி வரப்பட்ட 540 வெளி மாநில மதுப்புட்டிகள், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இரு காா்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனா்.
கைது செய்யப்பட்ட இருவா் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட மதுப்புட்டிகள், 2 காா்கள் ஆகியவை செங்கல்பட்டு மாவட்ட மது விலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது எனவும் போலீஸாா் தெரிவித்தனா்.

