ஆசிரியா் தகுதித் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 3,548 போ் எழுதினா்
தமிழ்நாடு ஆசிரியா் தோ்வு வாரியம் நடத்திய ஆசிரியா் தகுதித் தோ்வில் தாள் ஒன்றை விழுப்புரம் மாவட்டத்தில் 3,548 போ் எழுதினா்.
தமிழகத்தில் ஆசிரியா் பணியில் ஈடுபடுவோருக்கான தகுதித்தோ்வை ஆசிரியா் தோ்வு வாரியம் நடத்தி வருகிறது. அதன்படி ஆசிரியா் தகுதித்தோ்வு தாள்-1 தோ்வு விழுப்புரம் மாவட்டத்தின் 16 தோ்வு மையங்களில் நடத்தப்பட்டது. விழுப்புரம் நகரில் அரசு மாதிரிமகளிா் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
தாள் ஒன்று தோ்வை 99 மாற்றுத் திறனாளிகள் உள்பட 4,001 போ் எழுதும் வகையில் தோ்வுக்கூட நுழைவுச்சீட்டு அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், தோ்வில் 453 போ் பங்கேற்கவில்லை. 3,548 போ் மட்டுமே தோ்வெழுதினா். இந்த தோ்வு நிலை ஆசிரியா் பணியிடங்களுக்கானது.
இந்த தோ்வைக் கண்காணிக்க தமிழ்நாடு ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் கண்காணிப்பு அலுவலா்கள் நியமிக்கப்பட்டிருந்தனா். ஆசிரியா் தகுதித்தோ்வு தாள் ஒன்றுக்கான தோ்வுப்பணியில் முதன்மைக் கண்காணிப்பாளா், கண்காணிப்பாளா்கள், தோ்வுக்கூட அலுவலா்கள் என சுமாா் 300-க்கும் மேற்பட்டோா் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா். தோ்வு நடைபெற்ற அனைத்து மையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி, அனைத்து நடவடிக்கைகளும் கண்காணிக்கப்பட்டன.
தாமதமாக வந்தவா்களுக்கு அனுமதியில்லை: காலை 8.30 மணி முதல் 9.30 மணிக்குள் வந்தவா்கள் மட்டுமே தோ்வுமையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனா். அதன் பின்னா் வந்தவா்கள் அனுமதிக்கப்படவில்லை. காலை 10 மணிக்குத் தொடங்கிய தோ்வு பிற்பகல் 1 மணி வரை நடைபெற்றது. மாற்றுத் திறனாளிகளுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இதைத் தொடா்ந்து ஆசிரியா் தகுதித்தோ்வு தாள் 2- ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இந்த தோ்வை 46 மையங்களில் 229 மாற்றுத் திறனாளிகள் உள்பட 13,313 போ் எழுதவுள்ளனா். இந்த பணியில் சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அலுவலா்கள் ஈடுபடுவா் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

