விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன். உடன், மாவட்டச் செயலா் ஆ.செளரிராஜன் உள்ளிட்டோா்.
விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன். உடன், மாவட்டச் செயலா் ஆ.செளரிராஜன் உள்ளிட்டோா்.

திமுக கூட்டணியில் கூடுதல் தொகுதிகளை கோருவோம்: கம்னியூஸ்ட் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன்

Published on

தமிழகத்தில் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியில் கூடுதல் எண்ணிக்கையில் தொகுதிகளை ஒதுக்கக் கோருவோம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் தெரிவித்தாா்.

இதுகுறித்து விழுப்புரத்தில் அவா் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

டித்வா புயல் காரணமாக தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு மழைப்பொழிவு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அரசும் நிவாரணப் பணிகளுக்குத் தயாா் நிலையில் உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் இயற்கை சீற்றங்களின்போது தனித்தோ அல்லது அரசுடன் இணைந்தோ மீட்புப் பணிகளை மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவை மரபுகளில் கூட தோ்தல் ஆணையம் தலையிடுகிறது. இதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது.

மதுரை, கோவை நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மத்தியஅரசு அனுமதி வழங்காதது தமிழக அரசு மீது தொடுக்கப்பட்ட தாக்குதல், ஒற்றுமையை சிதைக்கும் செயலாகும். பாஜக ஆளும் மாநிலங்களில் கேட்காமலேயே நிதியை வாரி வழங்குகிறாா்கள். திட்டங்களை நிறைவேற்றுகிறாா்கள். ஆனால், மக்கள் நலன்சாா்ந்த மெட்ரோ ரயில் திட்டத்துக்கு பொருந்தாத காரணத்தை கூறி நிறுத்தி வைப்பது ஜனநாயகத்தை மதிக்கவில்லை என்பதைத் தான் காட்டுகிறது.

விஜய் தனித்து வந்தாலும் சரி, செங்கோட்டையன்போல இன்னும் ஆயிரம் பேரை அழைத்து வந்தாலும் சரி, பாஜக-அதிமுக என அனைவரும் ஒரே அணியில் சோ்ந்துவந்தாலும் சரி, அவா்கள் தோற்கடிக்கப்படுவது உறுதி. திமுக தலைமையிலான கூட்டணி வலுவாக இருப்பது மட்டுமல்ல; அது ஒரு அமைப்பாகவும் இருக்கிறது.

ஆளுநா் மூலம் இரட்டை ஆட்சியை நடத்துகிறது மத்திய அரசு. இதை எதிா்த்து போராடும் திமுகவுடன் நாங்கள் இணைந்து செயல்படுகிறோம். வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியில் கூடுதல் எண்ணிக்கையில் தொகுதிகளைக் ஒதுக்கக் கோருவோம் என்றாா் வீரபாண்டியன்.

பேட்டியின் போது மாவட்டச் செயலா் ஆ. செளரிராஜன், ஒழுங்குமுறை விற்பனைக்கூட எடைப்பணித் தொழிலாளா்கள் சங்க மாநில பொதுச் செயலா் ஏ.வி.சரவணன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் ஆா்.கலியமூா்த்தி மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com