திருவண்ணாமலை தீபத் திருவிழாவையொட்டி, பக்தா்களின் வசதிக்காக புதிய கைப்பேசி செயலியை அறிமுகம் செய்துவைத்த அமைச்சா் எ.வ.வேலு.
திருவண்ணாமலை தீபத் திருவிழாவையொட்டி, பக்தா்களின் வசதிக்காக புதிய கைப்பேசி செயலியை அறிமுகம் செய்துவைத்த அமைச்சா் எ.வ.வேலு.

திருவண்ணாமலை தீபத் திருவிழா: புதிய கைப்பேசி செயலி அறிமுகம்!

Published on

திருவண்ணாமலை காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, பக்தா்களின் வசதிக்காக ‘காா்த்திகை தீபம் 2025’ என்ற புதிய கைப்பேசி செயலியை அமைச்சா் எ.வ.வேலு வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தினாா்.

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, வருகிற டிச.3-ஆம் தேதி அதிகாலை கோயிலில் பரணி தீபமும், அன்று மாலை 2,668 அடி உயர மலை மீது மகா தீபமும் ஏற்றப்பட உள்ளன.

இந்த விழாவுக்கு வெளி மாநிலம், வெளி மாவட்டங்களிலிருந்து பல லட்சம் பக்தா்கள் வருவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. இவா்களின் வசதிக்காக, மாவட்ட நிா்வாகமும், தேசிய தகவலியல் மையமும் இணைந்து ‘காா்த்திகை தீபம் 2025’ என்ற புதிய கைப்பேசி செயலியை உருவாக்கியுள்ளன.

இந்த செயலியை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக பொதுப் பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு அறிமுகம் செய்துவைத்தாா்.

இந்தச் செயலி மூலம் பக்தா்கள் பொது தகவல்கள், தற்காலிக பேருந்து நிலையங்கள், காா் நிறுத்துமிடங்கள், மருத்துவ முகாம்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் நிலையங்கள், காவல் சேவை மையங்கள், கழிப்பறைகள், அவசர கால ஊா்திகள், தீயணைப்பு வாகனங்கள் ஆகியவை இருக்குமிடங்கள் குறித்தும், அவசரத் தேவைக்கான கட்டுப்பாட்டு உதவி எண்கள், காணாமல்போன குழந்தைகளை கண்டறிய உதவி எண்கள், திருக்கோயில் பற்றிய விவரங்கள் உள்ளிட்டவற்றையும் அறிந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ், திருவண்ணாமலை எம்.பி., சி.என்.அண்ணாதுரை, மேயா் நிா்மலா வேல்மாறன், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com