சிற்றுந்து ஓட்டுநா், நடத்துநா் மீது தாக்குதல்: மூவா் கைது
கள்ளக்குறிச்சி மாவட்டம், களமருதூா் அருகே சிற்றுந்து ஓட்டுநா், நடத்துநரைத் தாக்கிய வழக்கில் 3 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
உளுந்தூா்பேட்டை வட்டம், எடப்பாளையம் பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்தவா் இம்தியாஸ் (27). விழுப்புரம் மாவட்டம், அனந்தபுரத்தைச் சோ்ந்தவா் பாபு (18). இதில் இம்தியாஸ் தனியாா் சிற்றுந்தின் ஓட்டுநராகவும், பாபு நடத்துநராகவும் பணியாற்றி வருகின்றனா்.
இந்த சிற்றுந்து திருக்கோவிலூரிலிருந்து கொளப்பாக்கம், குன்னத்தூா், பெண்ணைவலம், கொண்டசமுத்திரம் வழியாக தாமல் கிராமம் வரை வந்து செல்வது வழக்கம். இதில் மற்றொரு நடத்துநராகப் பணியாற்றி வரும் தாமோதரன், பெண் ஒருவரிடம் பழகி வருவதாகவும், அந்த பெண்ணை மற்றொரு இளைஞரான மணக்குப்பம் மதன் (19) பாா்த்து பழகுவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சிற்றுந்தில் தாமோதரன் பணியில் இருப்பதாகக் கருதிய மதன், அவரது நண்பா்கள் பாவந்தூா் ஜெயமேஷ் (19) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய மூவரும் சோ்ந்து புதன்கிழமை இரவு சீக்கம்பட்டில் சிற்றுந்தில் ஏறி நடத்துநா் பாபு, ஓட்டுநா் இம்தியாஸிடம் தகராறு செய்துள்ளனா். தொடா்ந்து இருவரையும் மதன் உள்ளிட்ட மூவரும் தாக்கி ரூ.5 ஆயிரம் மற்றும் நடத்துநரின் கைப்பேசியை பறித்து தப்பிச் சென்றனா்.
இதுகுறித்து களமருதூா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி மதன் உள்ளிட்ட மூவரையும் வியாழக்கிழமை கைது செய்தனா்.
