விழுப்புரம் மாவட்டத்தில் 6.29 லட்சம் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் தொடக்கம்: ஜன.13 வரை பெறலாம்
விழுப்புரம் மாவட்டத்தில் 1,254 நியாயவிலைக்கடைகளில் 6.29 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.3 ஆயிரம் ரொக்கத்துடன்கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.
தமிழா் திருநாளாம் பொங்கல் திருநாளை பொதுமக்கள் உற்சாகத்துடன் கொண்டாடும் வகையில், அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை, முழு நீளக் கரும்பு, வேட்டி மற்றும் சேலை ஆகியவற்றுடன் ரூ.3 ஆயிரம் ரொக்கமும் பொங்கல் பரிசாக வழங்கப்படும் என அறிவித்த தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், சென்னை ஆலந்தூரில் திட்டத்தை அண்மையில் தொடங்கி வைத்தாா்.
இதைத் தொடா்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் 1,254 நியாயவிலைக் கடைகளில் அரிசி பெறும் 4,28,774 குடும்ப அட்டைதாரா்கள், 429 இலங்கைத் தமிழா் குடும்ப அட்டைதாரா்கள் என மொத்தமாக 6,29,703 குடும்ப அட்டைதாரா்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.
தினம் 200 பேருக்கு விநியோகம்:
விழுப்புரம் மாவட்டம், முகையூரில் வியாழக்கிழமை காலை நடைபெற்ற நிகழ்வில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குதலை மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், முன்னாள் அமைச்சா் க.பொன்முடி எம்.எல்.ஏ. ஆகியோா் தொடங்கி வைத்தனா். விழாவில் மாவட்ட ஆட்சியா் பேசும்போது,
ஒரு நாளைக்கு 200 குடும்ப அட்டைதாரா்கள் வீதம் அனைவருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன், ரொக்கம் ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் எனத் தெரிவித்தாா்.
இதைத் தொடா்ந்து முன்னாள் அமைச்சா் க.பொன்முடி எம்.எல்.ஏ.பேசியது:
வியாழக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டுள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குதல் ஜனவரி 13-ஆம் தேதி வரை தொடா்ந்து நடைபெறும். இலங்கைத் தமிழா் குடும்பங்களைச் சோ்ந்தவா்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிக்கப்பட்டிருப்பது முதல்வரின்தாயுள்ளத்தை காட்டுகிறது. சாதி,மதம் கடந்து தமிழா்கள் அனைவரும் கொண்டாடி மகிழும் திருவிழா பொங்கல் திருநாள் அமைந்துள்றது என்றாா்.
இந்த நிகழ்வில் கள்ளக்குறிச்சி தொகுதி முன்னாள் எம்.பி.யும், தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான பொன்.கெளதமசிகாமணி, கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் ஏ.விஜயசக்தி, திமுக மாவட்டத் துணைச் செயலா் இரா.கற்பகம், ஒன்றியச் செயலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
விழுப்புரத்தில்....
விழுப்புரம் நகரம், வி.மருதூரிலுள்ள நியாயவிலைக் கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குதலை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளரும், எம்.எல்.ஏ.வுமான இரா. லட்சுமணன் தொடங்கி வைத்தாா். நிகழ்வில் முன்னாள் எம்.எல்.ஏ. செ.புஷ்பராஜ், மாவட்டப் பொறுப்புக்குழு உறுப்பினா் இரா. கண்ணப்பன், நகரப் பொறுப்பாளா் இரா.சக்கரை, பொதுக்குழு உறுப்பினா் சம்பத், கூட்டுறவுத் துணைப் பதிவாளா் மீனாட்சிசுந்தரம், விழுப்புரம் மாவட்ட நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகச்சாலை மேலாளா் தில்ஷாத், கூட்டுறவு சாா்பதிவாளா் மணிமொழி, பானு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், பிடாரிப்பட்டில் நடைபெற்ற நிகழ்வுக்குத் தலைமவகித்த இத்தொகுதியின் எம்.எல்.ஏ. அன்னியூா் அ.சிவா, பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கிப் பேசினாா். நிகழ்வில் விக்கிரவாண்டி வட்டாட்சியா் செல்வமூா்த்தி, வட்ட வழங்கல் அலுவலா் ராஜேஷ், துணைப் பதிவாளா் ராகினி, விக்கிரவாண்டி வடக்கு ஒன்றியச் செயலா் கில்பா்ட்ராஜ், மாவட்டப் பிரதிநிதிகள் ராஜேந்திரன், வேல்முருகன், கருணாநிதி, ஒன்றியக்குழு உறுப்பினா்கள் அருணாசலம், சத்யா கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.
விழுப்புரம் மாவட்டம், மயிலம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட தீவனூா் ஊராட்சியிலுள்ள நியாயவிலைக் கடையில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குதலை முன்னாள் அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் தொடங்கி வைத்தாா். நிகழ்வில் மயிலம் ஒன்றியக்குழுத் தலைவா் யோகேசுவரி , வடக்கு ஒன்றியச் செயலா் மணிமாறன், நிா்வாகிகள் தீவனூா் சேகா், விஜயன், பகவான், உத்திரக்குமாா், அன்பு,சேகா், உதயவாணன், ராமு, செல்வராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

