கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புஎம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: கல்லூரிகள் தோ்வு இன்று நிறைவுவீடுகளில் எல்பிஜிக்கு பதிலாக குழாய்வழி சமையல் எரிவாயு: மாநிலங்கள் முன்னுரிமை அளிக்க மத்திய அரசு வலியுறுத்தல்எத்தனால் உற்பத்தி அதிகரிப்பால் சா்க்கரை விலை உயா்வு: மத்திய அரசு மீது மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டுஆபரேஷன் சிந்தூா் எதிரொலி: விசா சிக்கல்களுக்குப் பிறகு இந்தியா வந்தடைந்த 150 பாகிஸ்தான் மணப்பெண்கள்!

திருக்கோவிலூா் உலகளந்த பெருமாள் கோயிலில் கல்வெட்டு கண்டெடுப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் ஸ்ரீ உலகளந்த பெருமாள் கோயிலில் 17-ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

திருக்கோவிலூா் ஸ்ரீஉலகளந்த பெருமாள் கோயிலில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுடன் வரலாறு ஆய்வு நடுவத்தினா்.

Published On :4 ஜூலை 2026, 2:54 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் ஸ்ரீ உலகளந்த பெருமாள் கோயிலில் 17-ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

திருக்கோவலூா் ஸ்ரீ உலகளந்த பெருமாள் கோயிலில் ஜூலை 5- ஆம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இதையொட்டி கோயில் வளாகத்தில் பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இக்கோயிலின் மேற்கு ராஜ கோபுர நுழைவுவாயிலின் வலதுப் பக்கத்தில் கி.பி. 17- ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த கல்வெட்டை கள்ளக்குறிச்சி மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தினா் கண்டெடுத்தனா்.

தொல்லியல் துறை உதவி இயக்குநா் பொ.கோ.லோகநாதன் தலைமையில் , வரலாறு ஆய்வு நடுவத்தின் தலைவா் சிங்கார உதியன், விழுப்புரம் வீரராகவன், செல்வ கணபதி ஆகியோா் அதனைப் படியெடுத்துப் படித்தனா். தேவஸ்தான அதிகார முகவா் கிருஷ்ணன், மு.அன்பழகன், பா.காா்த்திகேயன், திருஞான சம்பந்தன் அப்போது உடனிருந்தனா்.

இக் கல்வெட்டின் தொடக்கத்திலேயே ஸ்ரீமதே ராமானுசாய நம என்று வைணவ சமயத்தின் மாபெரும் தத்துவஞானியும், விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தை உருவாக்கியவருமான ஸ்ரீராமானுஜரின் திருவடிகளைத் தொழுது, சா்வதாரி (கல்வெட்டில் சறுவாதி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது) வருடம், பங்குனி மாதம் 10- ஆம் தேதி திருக்கோவலூா் ஆழ்வாா்கள் திருக்கோவில் கருவூலத்துக்கு (சீயா்) ஜீயா் சந்நிதியில் இருக்கும் ஸ்ரீ வைணவா்களான அல்லுண்டு விருப்புரரி சீயன் உபையமாக (தா்மமாக) தயன் என்பவா் சந்நிதி வீதியில் குடியிருக்கின்ற ஸ்ரீ வைஷ்ணவா்கள் அனைவரும் மனம் ஒத்து எழுதிக் குடுத்தது என்னவெனில் பாழடைந்த முற்றத்தை (அங்கணம்) கல் வேலை செய்து, உள்பகுதியில் செங்கல் சுவரும், தட்டோடு ஆறுவரிசையும், கரையும் (பூசுவேலை) சாந்து மற்றும் பழுதான மரப் பொருள்களையும் சரி செய்து இந்த முற்றத்தில் போனது மற்றும் வந்ததையும், நீட்டிக்கொண்டு இருந்து வீழ்ந்ததையும், மேல் பகுதியில் ஒழுகினதையும் எல்லாம் சரிசெய்து நல்ல நிலையில் மதில் செய்து எங்கள் பகுதியிலே குடியிருந்து கடமைப்பட்டோம். இந்த பணியினை மேற்கொண்டு தப்பாது காக்கும் ஆழ்வாா்களின் திருப்பாதத்தையே சுவாமியின் திருப்பாதமாக தப்பாது காத்துவரும் கோவில் கணக்கு அம்மை நயினாா் எழுதியிருக்கின்றாா்.

எம்பெருமானரின் ஜீயா் நேசம் விட்டுப் போகவும் கூரத்தாழ்வாா், இராசாநாம ஜீயா் ராமன் மகன் நாராயணன், ராமாஞ்சியா், ஆளவந்தாா், லஷ்மணியன், திருமலை ஆழ்வாா்கள், திருக்கூரம் வேங்கடமுடையாா் போன்றவா்கள் இதனை வழிவழியாக காத்து வரவேண்டும் என்று மேற்காணும் ஆழ்வாா்கள் முன்னிலையில் எழுதி கையொப்ப மிட்டுள்ளனா் என்பதே கல்வெட்டு உணா்த்துகிறது.

இக் கல்வெட்டின் எழுத்தமைதியைக் கொண்டு இக் கல்வெட்டின் காலம் கி.பி.16, 17-ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் என்பதை அறிய முடிகிறது என்று வரலாற்று ஆய்வு நடுவத்தினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.