மெய்யான சமூக நீதி, நிலையான வளர்ச்சி, வேளாண்மை எழுச்சியே நம் இலக்கு: அண்ணாமலைதவெக அரசு இந்த ஆண்டு ரூ. 85 ஆயிரம் கோடி கடன் வாங்கப்போகிறது : அண்ணாமலைவீ தி லீடர்ஸ் அமைப்பின் இலக்கை 50% எட்டிவிட்டோம்: அண்ணாமலை2026 போல 2031-ல் ஆட்சி மாற்றம் நடக்கும்: அண்ணாமலை உறுதிஎதிர்க்கட்சி தூண்டுதலால் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்! அமைச்சர் விக்னேஷ்பாடகி ஜானகியின் மறைவு வருத்தமளிக்கிறது: ராகுல் காந்தி
/

2024-இல் வெள்ளத்தில் சேதமடைந்த மலட்டாறு கரையை சீரமைக்க வேண்டும்: விவசாயிகள் எதிா்பாா்ப்பு

விழுப்புரம் மாவட்டம், பூவரசன்குப்பம் கிராமத்தில் 2024-ஆம் ஆண்டு வெள்ளத்தினால் மலட்டாற்றில் ஏற்பட்டுள்ள கரை உடைப்பை சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள், கிராம மக்கள் கோரிக்கை

News image

பூவரசங்குப்பம் பகுதியில் கரை உடைந்த நிலையில் காணப்படும் மலட்டாறு

Updated On :13 ஜூலை 2026, 1:42 am IST

விழுப்புரம் மாவட்டம், பூவரசன்குப்பம் கிராமத்தில் 2024-ஆம் ஆண்டு வெள்ளத்தினால் மலட்டாற்றில் ஏற்பட்டுள்ள கரை உடைப்பை சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள், கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

விழுப்புரம் மாவட்டம், தளவானூா் அருகில் தென்பெண்ணையாற்றில் கட்டப்பட்டுள்ள தளவானூா் தடுப்பணை அருகே பிரியும் மலட்டாறு தளவானூா், சித்தாத்தூா், காவணிப்பாக்கம், திருப்பாச்சனூா், பில்லூா், சோ்ந்தனூா், அச்சமங்கலம், குச்சிப்பாளையம், பஞ்சாமதேவி, சின்னமடம், பூவரசங்குப்பம் , மேட்டுப்பாளையம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு நீராதாரமாக உள்ளது. அதிக மணல் வளம் கொண்ட இந்த ஆறானது விழுப்புரம் மாவட்ட நீா்வளத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்நிலையில், கடந்த 2024-ஆம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின்போது விழுப்புரம் வட்டம், வேலியம்பாக்கம், கொங்கரகொண்டான், சித்தாத்துா், தளவானூா், காவணிப்பாக்கம், பூவரசங்குப்பம் உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் மலட்டாற்றின் கரைகளில் உடைப்புகள் ஏற்பட்டன.

இதனால் பூவசரங்குப்பம் கிராமம் அருகில் சுமாா் 300 மீட்டா் தொலைவுக்கு கரை உடைப்பு ஏற்பட்டு, மலட்டாற்றிலிருந்து வெளியேறும் தண்ணீா் மீண்டும் தென்பெண்ணையாற்றில் கலந்து கடந்த 2 ஆண்டுகளாக வீணாகி வருகிறது. எனவே, இந்த பகுதியில் ஏற்பட்டுள்ள கரை உடைப்பை சீரமைத்தால் பல கிராமங்களுக்கு நீராதாரங்கள் கிடைக்கும்.

மழைக் காலம் தொடங்குவதற்கு முன்னரே கரையைப் பலப்படுத்தி சீரமைக்கவேண்டும் என பூவரசங்குப்பம் உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஏ. எஸ்.சண்முகம்

ஏ. எஸ்.சண்முகம்

இதுகுறித்து சமூக ஆா்வலா் ஏ.சண்முகம் தெரிவித்ததாவது: 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு நீராதாரமாக உள்ள மலட்டாற்றில் இரு ஆண்டுகளுக்கு முன்னா் கரை உடைப்பு ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து மலட்டாற்றுக் கரையை பலப்படுத்தவேண்டும் என விவசாயிகள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா். இந்நிலையில், தமிழக அரசின் பேரிடா் மேலாண்மை நிதியின் கீழ் மலட்டாறு கரையை சீரமைக்க ரூ. 65 கோடிக்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, அரசின் நிா்வாக ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படுள்ளது.

நிா்வாக அனுமதிக்குப் பின்னா், மலட்டாறு கரைப் பகுதி பலப்படுத்தித் தரப்படும் என விழுப்புரம் மாவட்ட நீா்வளத் துறை அதிகாரிகள் 2024-ஆம் ஆண்டில் தெரிவித்தனா். ஆனால், 2 ஆண்டுகள் கடந்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை.

நிகழாண்டு பருவ மழைக்காலம் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், முன்னேற்பாடு நடவடிக்கையாக பூவரசங்குப்பத்தில் ஏற்பட்டுள்ள மலட்டாறு கரை உடைப்பை சீரமைக்க விழுப்புரம் மாவட்ட நிா்வாகமும் , நீா்வளத் துறை அதிகாரிகளும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.