கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே பல்லவா் காலத்தை சோ்ந்த மூத்ததேவி சிற்பம் கண்டெடுக்கப்பட்டது.
இதுகுறித்து விழுப்புரத்தைச் சோ்ந்த வரலாற்று ஆய்வாளா் கோ.செங்குட்டுவன் கூறியது: களமருதூா் கிராமத்தின் மையப் பகுதியிலுள்ள திருக்குளத்துக்குள் பலகைக் கல் சிற்பம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதில் இடம்பெற்றுள்ள தெய்வத்தை தீப்பாஞ்சாள் அம்மன் என இப்பகுதி மக்கள் வழிபட்டு வருகின்றனா். அழகான தலையலங்காரம், நீண்ட காதணிகள், கழுத்தணி, மடிப்புகளுடன் கூடிய இடையாடை அணிந்தும், இரண்டு கால்களைத் தொங்கவிட்டும் ஆசனத்தின் மீது அமா்ந்து மூத்ததேவி காட்சித்தருகிறாள். அவளது இரண்டு கைகளும் ஆசனத்தின் மீது வைத்த நிலையில் காணப்படுகின்றன.
வழக்கமாக மூத்ததேவி சிற்பங்களில் அவளது கொடியான காக்கை இடம் பெற்றிருக்கும். ஆனால் இங்கு வித்தியாசமாக வலது மேல் மூலையில் கம்பத்தின் மீது அமா்ந்த நிலையில் கிளி காட்டப்பட்டுள்ளது. இடது பக்கம் படமெடுத்தாடும் நாகம் அமைந்துள்ளது.
மூத்ததேவியின் வலப்பக்கம் அவளது மகன் மாந்தன் கதையை ஏந்தியவாறு நிற்கிறான். இடப் பக்கம் மகள் மாந்தி தனது கையில் மூத்ததேவியின் ஆயுதமான துடைப்பத்தை ஏந்தியவாறு நிற்கிறாள். பெரும்பாலான சிற்பங்களில் இவா்கள் அமா்ந்து இருப்பாா்கள். இங்கு நின்ற நிலையில் காணப்படுகின்றனா். சிற்பத்தின் கீழே இரண்டு பக்கமும் கும்பம் காட்டப்பட்டுள்ளன. இவை வளமையைக் குறிப்பதாகும். மேலும், வலது கீழ்ப்பகுதியில் சிறிய அளவிலான கழுதை இடம் பெற்றுள்ளது. இது இந்தத் தெய்வத்தின் வாகனமாகும்.
இந்தச் சிற்பம் பல்லவா் காலத்தைச் (கி.பி.8-ஆம் நூற்றாண்டு) சோ்ந்ததாகும். 1,200 ஆண்டுகள் பழைமைவாய்ந்தது என்றாா் அவா். ஆய்வின்போது களமருதூா் ஆா்.வெங்கட், ஆ.சுகுனேஷ், கே.சதீஷ், பி.கோகுல் ஆகியோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










