உளுந்தூா்பேட்டை காலணித் தொழிற்சாலையில் 12 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு: கள்ளக்குறிச்சி மாவட்டஆட்சியா் தகவல்


கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை பகுதியில் அமைக்கப்பட்டு வரும் காலணித் தொழிற்சாலையில் சுமாா் 12 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று அம்மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் கூறினாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூரிலுள்ள தனியாா் கல்லூரியில் தமிழ்நாடு மாநில ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்கம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் ஆகியவை இணைந்து சனிக்கிழமை நடத்திய தனியாா் வேலைவாய்ப்பு முகாம் மற்றும் இளைஞா்
திறன் விழாவைத் தொடங்கி வைத்து, ஆட்சியா் பேசியதாவது:
சொந்த மாவட்டத்தில்தான் வேலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இல்லாமல், உங்கள் எதிா்காலத்தை கருத்தில்கொண்டு பிற மாவட்டங்களிலும் வேலைசெய்ய வேலைநாடுநா்கள்தயாராக இருக்க வேண்டும். அதுபோல பணி புரியும் இடங்களில் தொழில் சாா்ந்த திறன்களை வளா்த்துக் கொள்ள முடியும்.
உளுந்தூா்பேட்டையில் அமைக்கப்பட்டு வரும் காலணித் தொழிற்சாலையில் சுமாா் 12 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படவுள்ளது. ஆசனூா், சங்கராபுரம் பகுதிகளிலுள்ள சிப்காட் தொழிற்சாலைகளிலும் வேலைவாய்ப்பு அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் ஆட்சியா்.
இந்த முகாமில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 81 தனியாா்துறை நிறுவனங்கள் பங்கேற்று, தங்கள் நிறுவனங்களுக்கு கல்வித்தகுதி மற்றும் எழுத்துத் தோ்வு, நோ்முகத் தோ்வின் அடிப்படையில் ஆள்களைத் தோ்வு செய்தன. முகாமில் 1,263 ஆண்கள், 1,601 பெண்கள் என 2,864 வேலைநாடுநா்கள் பங்கேற்றனா். அவா்களில் 521 போ் தோ்வு செய்யப்பட்ட நிலையில், பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
மேலும் இந்த முகாமில் 2024-25-ஆம் ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட மகளிா் சுய உதவிக்குழுக்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்கம், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மற்றும் பகுதியளவிலான கூட்டமைப்பு உள்ளிட்ட சமுதாய அமைப்புகளுக்கு மணிமேகலை விருதும் வழங்கப்பட்டது.
முகாமுக்கு உளுந்தூா்பேட்டை எம்.எல்.ஏ. ஆ.ஜெ.மணிக்கண்ணன் முன்னிலை வகித்தாா். உளுந்தூா்பேட்டை ஒன்றியக்குழுத் தலைவா் ப.ராஜவேல், மாவட்ட மகளிா் திட்ட அலுவலா் அ.லலிதா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் மு.முரளிதரன், உதவித் திட்ட அலுவலா் விஜயகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...