100 ஆண்டுகளுக்கு பயன்தரும் வக்காரமாரி குடிநீர் திட்டம் சீரமைக்கப்படுமா?

சிதம்பரம், செப். 22:   கல்விக் கோயிலை திறந்த திவான்பகதூர் ராமசாமி செட்டியார் குடும்பத்தினர், சிதம்பரம் நகர மக்களுக்காக வக்காரமாரி குடிநீர் தேக்கத் திட்டத்தை 1915-ம் ஆண்டு அர்ப்பணித்துள்ளனர்.   ஆனால் இ
100 ஆண்டுகளுக்கு பயன்தரும் வக்காரமாரி குடிநீர் திட்டம் சீரமைக்கப்படுமா?
Updated on
1 min read

சிதம்பரம், செப். 22:   கல்விக் கோயிலை திறந்த திவான்பகதூர் ராமசாமி செட்டியார் குடும்பத்தினர், சிதம்பரம் நகர மக்களுக்காக வக்காரமாரி குடிநீர் தேக்கத் திட்டத்தை 1915-ம் ஆண்டு அர்ப்பணித்துள்ளனர்.

  ஆனால் இத்திட்டம் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பராமரிக்கப்படாமல் உள்ளது. வக்காரமாரி குடிநீர் திட்டத்தை சீரமைத்து பராமரித்தால் நகரில் இருவேளை குடிநீர் வழங்கலாம். ஆனால் நகராட்சி நிர்வாகம் இதனை சீரமைப்பதை விட்டுவிட்டு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த ஆர்வம் காட்டி வருகிறது. எனவே வக்காரமாரி திட்டம் பாதுகாக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

  திவான்பகதூர் ராமசாமி செட்டியாரால் சிதம்பரத்திலிருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ள வக்காரமாரி என்ற கிராமத்தில் 56 ஏக்கர் பரப்பளவில் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. ராஜன்வாய்க்கால் ஓரம் இரு குளங்களை வெட்டி அங்கு உயர்ரக பில்டர் (நீர் வடிகட்டி) மூலம் நீர் சுத்திகரிக்கப்பட்டு அங்கிருந்து குழாய் மூலம் சிதம்பரம் மேலரதவீதியில் உள்ள மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டியில் நீர் ஏற்றப்பட்டு நகர மக்களுக்கு கடந்த 75 ஆண்டுகளாக குடிநீர் வழங்கப்பட்டு வந்துள்ளது.

  அங்குள்ள ஒவ்வொரு குளமும் 164 மில்லியன் லிட்டர் தண்ணீர் சேமித்து வைக்கக்கூடிய அளவில் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது நீர் வடிகட்டி பழுதடைந்துள்ளதால் ஆற்றுநீரை சுத்திகரித்து அனுப்ப முடியவில்லை. எனவே அங்கு போடப்பட்டுள்ள ஆழ்துளை கிணறு மூலம் நீரேற்றப்பட்டு அனுப்பப்பட்டு வருகிறது. ஆனால் இரு குளங்களிலும் நீர்தேக்கி வைக்கப்பட்டுள்ளது.

  இயற்கையான சூழ்நிலையில் போர்வெல் இன்றி குடிநீர் பெறும் இந்த வக்காரமாரி நீர்தேக்கத் திட்டத்தை தற்போது சீரமைத்தால் இன்னும் நூறு ஆண்டுகளுக்கு சிதம்பரம் நகர மக்களுக்கு குடிநீர் பஞ்சமே ஏற்படாது. சுகாதாரமான குடிநீரை இரு வேளையும் வழங்க முடியும். எனவே இத்திட்டத்தை சீரமைக்க கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு நுகர்வோர் குழுமச் செயலாளர் சி.டி.அப்பாவு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  தற்போது வக்காரமாரி நீர்தேக்கத்தில் போர்வெல் மூலம் நீரேற்றப்பட்டு சிதம்பரம் நகருக்கு கொண்டு வரப்பட்டு தற்போது ஒருவேளை மட்டும் சுமார் 20 நிமிடம்தான் குடிநீர் வழங்கப்படுகிறது. மேலும் அந்த குடிநீருடன் சில இடங்களில் சாக்கடை நீர் கலந்து வருவதால் பொதுமக்கள் நோய் தாக்கும் அபாயத்தில் உள்ளனர் என பாமக நகர்மன்ற உறுப்பினர் ஆ.ரமேஷ் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com