தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் 997 தொடக்கப்பள்ளிகளும், 63 நடுநிலைப்பள்ளிகளும், 133 உயர்நிலைப்பள்ளிகளும், 100 மேல்நிலைப்பள்ளிகளும், 1300-க்கும் மேற்பட்ட விடுதிகளும் இயங்கி வருகின்றனர். இவைகள் அனைத்தையும் மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் மற்றும் வட்டாட்சியர்கள் மேற்பார்வையிட்டு நடத்தி வருகின்றனர். மேற்கண்ட ஆதிதிராவிட நலத்துறை அதிகாரிகள், அரசின் நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு கொண்டு செல்லும் பணிகள் உள்ளதால், போதிய நேரம் இல்லாததால் ஆதிதிராவிட நலத்துறை பள்ளிகளை ஆய்வு செய்து, நிர்வகிக்க இயலவில்லை. இதனால் ஆதிதிராவிட நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் நிர்வாக சீர்கேடு ஏற்பட்டு கல்வியில் மிகவும் பின்தங்கியுள்ளது. பல்வேறு முறைகேடுகளும் நடைபெற்று வருகிறது. குறிப்பாக சிதம்பரம் வட்டாட்சியர் (ஆதிதிராவிடர் நலத்துறை) அலுவலகத்தில் ரூ.1 கோடிக்கு மேல் பணம் கையாடல் செய்யப்பட்டுள்ளது கண்டறியப்பட்டு கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக வட்டாட்சியர்கள், அலுவலக உதவியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.