தாம்பரம் - செங்கோட்டை ரயில் கடலூரில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய ரயில்வே துறை அமைச்சரிடம் கடலூர் மக்களவை உறுப்பினர் ஆ.அருண்மொழிதேவன் வலியுறுத்தி மனு அளித்தார்.
கடலூர் மக்களவை உறுப்பினர் ஆ.அருண்மொழிதேவன் செவ்வாய்க்கிழமை புதுதில்லியில் ரயில்வே துறை மத்திய அமைச்சர் பியூஷ்கோயலை சந்தித்தார். அப்போது இந்த மனுவை அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
சென்னை தாம்பரம் - செங்கோட்டை இடையே பரிசோதனை அடிப்படையில் ரயில் (ரயில் எண்: 16189 - 16190) இயக்கப்பட்டது. இந்த ரயில் கடலூர் திருப்பாதிரிபுலியூரில் நின்று செல்ல வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தேன். அதன் அடிப்படையில், ரயில் நின்று சென்றது. இந்த ரயில் பிப்ரவரி 1 -ஆம் தேதி முதல் நிரந்தர ரயிலாக மாற்றப்பட்டு, கடலூர் வழியாகச் சென்று வருகிறது. ஆனால், கடலூர் திருப்பாதிரிபுலியூர் ரயில் நிலையத்தில் நின்று செல்வதில்லை. மாவட்டத் தலைநகராக விளங்கும் திருப்பாதிரிபுலியூர் சரித்திரம், ஆன்மிகம், வணிகம் தொடர்பாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஊராகும். மக்கள் தொகை அடிப்படையிலும் அதிகமானோர் வசித்து வருகின்றனர்.
எனவே, இந்த ரயிலை திருப்பாதிரிபுலியூர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தபால் பிரிப்பு அலு
வலக பிரச்னை: அதே போல, மற்றொரு மனுவையும் மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ்கோயல், தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் மானோஜிசின்கா ஆகியோரை சந்தித்து அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியுள்ளதாவது:
கடலூர் ரயில் நிலையத்தில் ஆர்எம்எஸ் தபால் பிரிப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தை மூடி விட்டு, விருத்தாசலத்துடன் இணைக்க உள்ளதாகக் கூறப்பட்டு வருகிறது. அவ்வாறு மூடப்பட்டால், அது தனியார் கூரியர் நிறுவனங்களுக்கு லாபத்தையும், பொதுமக்களுக்கும் அரசுக்கும் பெருத்த நஷ்டத்தையுமே ஏற்படுத்தும்.
ஆயிரக்கணக்கான தபால்கள் பொதுமக்களுக்கு மிகவும் தாமதமாகவே சென்று சேரும் நிலை ஏற்படும். இவ்வாறு பொதுமக்களுக்கும், அரசுக்கும் மிகுந்த இழப்பை ஏற்படுத்தக் கூடிய ஆர்எம்எஸ் அலுவலகத்தை மூடும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்.
கடலூரிலேயே இந்த அலுவலகம் தொடர்ந்து செயல்படுவதற்கான உறுதியை வழங்க வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்பின் போது, மக்களவை உறுப்பினர்கள் கோ.அரி, மைத்ரேயன் ஆகியோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









