இலவச கட்டாயக் கல்வி உரிமைச்
சட்டத்தின்கீழ் பள்ளியில் சேர்க்கப்பட்ட குழந்தைக்கு, அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகக் கூறி அந்தக் குழந்தையின் பெற்றோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர்.
பண்ருட்டி அருகே உள்ள கணிசப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் எஸ்.சீனுவாசன் (40). கூலித்தொழிலாளி. இவர் தனது மனைவி சித்ரா, மகன் அரிஸ்வர் ஆகியோருடன் திங்கள்கிழமை கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மனு அளிக்க வந்தார். அப்போது, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் இடஒதுக்கீடு பெற்ற தனது மகனிடம், அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகக்கூறி கோரிக்கை அட்டையுடன் தர்னாவில் ஈடுபட்டார்.
பின்னர் அவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். அதில் தெரிவித்துள்ளதாவது: மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பண்ருட்டியில் உள்ள தனியார் பள்ளியில் எனது மகன் அரிஸ்வரை கடந்தாண்டு எல்கேஜி வகுப்பில் சேர்த்தேன். தற்போது எனது மகன் யுகேஜி சென்றுள்ள நிலையில், ரூ.6,500 கட்டணமாகச் செலுத்த வேண்டுமென பள்ளி நிர்வாகம் தெரிவித்தது.
இதுகுறித்து பள்ளியில் கேட்டபோது, இலவச கல்வி உரிமைச் சட்டத்தில் பாதி தொகையை மட்டுமே பள்ளி நிர்வாகம் ஏற்கும். மீதித் தொகையை நீங்கள்தான் செலுத்த வேண்டுமெனக் கூறினர். மேலும், குழந்தைக்கு கராத்தே, யோகா கற்பிக்கப்படுவதாகவும், அதற்கான தொகையையும் செலுத்தியாக வேண்டும் என்கிறார்கள் என அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.
மனு குறித்து உரிய விசாரணை நடத்துமாறு கல்வித் துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.