இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

குழப்பங்களுடன் நடைபெறும் கூட்டுறவுச் சங்கத் தேர்தல்: அரசியல் கட்சியினர் எதிர்ப்பு

கடலூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் கூட்டுறவுக் கடன் சங்கத் தேர்தலில் பல்வேறு குழப்பங்கள் நிலவி வருவதால், அரசியல் கட்சியினர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

Updated On :29 மார்ச் 2018, 3:10 am

கடலூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் கூட்டுறவுக் கடன் சங்கத் தேர்தலில் பல்வேறு குழப்பங்கள் நிலவி வருவதால், அரசியல் கட்சியினர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
கடலூர் மாவட்டத்தில் கூட்டுறவுக் கடன் சங்கங்கள், வீட்டு வசதி சங்கங்கள், சமூக நலத் துறைப் பணியாளர் சங்கங்கள், பணியாளர் கூட்டுறவுச் சங்கங்கள், கைத்தறி துணி நூல் கூட்டுறவுச் சங்கங்கள் உள்பட 15 துறைகளின் சங்கங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. அந்த வகையில், அதிக போட்டி நிறைந்ததாகக் கூட்டுறவுக் கடன் சங்கங்களுக்கான தேர்தல் உள்ளது. 4 கட்டங்களாக நடைபெறும் இந்தத் தேர்தலில் முதல் கட்டமாக 27 சங்கங்கள், இரண்டாம் கட்டமாக 30 சங்கங்கள், மூன்றாம் கட்டமாக 29 சங்கங்கள், நான்காம் கட்டமாக 31 சங்கங்களுக்குத் தேர்தல் நடத்தப்படுகிறது.
முதல் கட்டத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 26- ஆம் தேதி தொடங்கியது.
ஆனால், கடலூர் மாவட்டத்தில் எத்தனை பேர் மனு தாக்கல் செய்தார்கள்? எத்தனை பேர் திரும்பப் பெற்றார்கள்? போட்டியிடுபவர்கள் எத்தனை பேர்? போன்ற விவரங்களை கடலூர் மண்டலக் கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர் அலுவலகத்தால் தெரிவிக்க முடியவில்லை.
இதனிடையே, பல்வேறு கிராமங்களில் ஒரு தரப்பினர் மட்டுமே மனு தாக்கல் செய்ததுடன், மற்றவர்களை மனு தாக்கல் செய்யவிடவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
மேலும், சில கிராமங்களில் ஆளுங்கட்சி தரப்பினர் தேர்வு செய்யப்பட்டு விட்டதாகவும், தேர்வானவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டதாகவும் தகராறுகள் ஏற்பட்டுள்ளன.
இவ்வாறு பல்வேறு குழப்பங்களுக்கு நடுவே கடலூர் மாவட்டத்தில் முதல் கட்டமாக தேர்தல் நடைபெற்றுள்ளது.
இந்த நிலையில், மாவட்டத்தில் நடைபெற்று வரும் கூட்டுறவுத் தேர்தல் தொடர்பாக திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அதிருப்தி தெரிவித்தனர்.
இதுதொடர்பாக மாவட்ட திமுக செயலர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. மாவட்ட ஆட்சியரை செவ்வாய்க்கிழமை சந்தித்து மனு அளித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் டி.ஆறுமுகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
கடலூர் மாவட்டத்தில் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் தேர்தலை நடத்தவிடாமல் அனைத்து சங்கங்களிலும் தாங்களே வெற்றி பெற்றதாக அறிவித்து வருகின்றனர். எனவே, ஜனநாயக முறையில் தேர்தலை நடத்த கூட்டுறவுச் சங்கத் தேர்தல் ஆணையர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் முன்வர வேண்டும் என வலியுறுத்தினார்.
சின்னப்பேட்டையில்...
சின்னப்பேட்டை தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கத் தேர்தலில் பாமக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதைக் கண்டித்து, அந்தக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கூட்டுறவுச் சங்க அலுவலக வளாகத்தில் அமர்ந்து புதன்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், சின்னப்பேட்டையில் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்தச் சங்கத்தில் 11 இயக்குநர்கள் நியமனத்துக்கான வேட்பு மனு தாக்கல் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, பா.ம.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்ளிட்ட 24 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வேட்பு மனு பரிசீலனையின் போது, பா.ம.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரின் வேட்பு மனுக்களை நிராகரிக்கப்பட்டு, 11 பேர் தேர்வு செய்யப்பட்டதாக பட்டியல் கூட்டுறவுச் சங்க வளாகத்தில் ஒட்டப்பட்டதாம். இந்தத் தகவலை அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வி.உதயகுமார், ஒன்றியச் செயலர் ஆர்.லோகநாதன், பண்ருட்டி நகரச் செயலர் ஆர்.உத்தராபதி மற்றும் மாநில பாமக உழவர் பேரியக்கத் துணைத் தலைவர் து.அ.கணபதி, பண்ருட்டி தொகுதிச் செயலர் தி.நந்தகோபால், மாவட்ட அமைப்புச் செயலர் செ.குபேரன் உள்ளிட்ட 40 பேர், கூட்டுறவுக் கடன் சங்க அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டனர்.
அப்போது, அவர்கள் தேர்தல் அலுவலர் வரவேண்டும் என முழக்கமிட்டனர். நீண்ட நேரப் போராட்டத்துக்குப் பின்னர், காவல் துறையினர் கேட்டுக் கொண்டதன் பேரில், கூட்டுறவுக் கடன் சங்க வளாகத்திலிருந்து வெளியேறி, தொடர்ந்து முழக்கமிட்டனர். இதனால், அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, புதுப்பேட்டை காவல் நிலையம், பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகம் ஆகிய இடங்களுக்குச் சென்று மனு அளித்தனர்.
அந்த மனுவில், சின்னப்பேட்டை கூட்டுறவுக் கடன் சங்கத் தேர்தலை ரத்து செய்ய வேண்டும். காணாமல் போன தேர்தல் அலுவலரைக் கண்டுபிடிக்க வேண்டும். நியாயமான முறையில் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் எனத் தெரிவித்திருந்தனர்.

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.