பெண்ணாடம் அருகே சர்க்கரை ஆலையில் தொழிலாளி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்ததை அடுத்து சக தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பெண்ணாடம் அருகே உள்ள கூத்தக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் அருள்தாஸ் (59). எறையூரிலுள்ள சர்க்கரை ஆலையில் இயந்திரம் இயக்குபவராக பணியாற்றி வந்தார். ஞாயிற்றுக்கிழமை காலை வழக்கம்போல பணிக்கு வந்த அருள்தாஸ், திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனே அருகிலிருந்த சக தொழிலாளர்கள் அவரை மீட்டு பெண்ணாடத்திலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர், அங்கிருந்து அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைத்து, திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் உயிரிழந்தார்.
சர்க்கரை ஆலை நிர்வாகம் கடந்த 3 மாதங்களாக சம்பளம் வழங்காத நிலையில், அருள்தாஸ் மன வருத்தத்துடன் உடல்நலம் குன்றிய நிலையில் இருந்ததாகவும், அதனாலேயே நெஞ்சுவலி ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாகக் கூறி சக தொழிலாளர்கள் ஆலையில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். உயிரிழந்த அருள்தாஸ் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும், உடனடியாக 3 மாத ஊதியத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
பின்னர், தொழிலாளர்கள் தங்களது சட்டையில் கருப்பு வில்லை அணிந்து, திட்டக்குடி - விருத்தாசலம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த பெண்ணாடம் காவல் ஆய்வாளர் ரமேஷ்பாபு மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுதொடர்பாக வட்டாட்சியர் மூலம் நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் தெரிவித்தனர். இதையடுத்து தொழிலாளர்கள் சாலை மறியலைக் கைவிட்டு கலைந்துச் சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









