/

வெறிச்சோடிய சுற்றுலாத் தளங்கள்: சிறு வியாபாரிகள் கடும் பாதிப்பு

கடலூா் மாவட்டத்தில் கரோனா பொது முடக்கம் காரணமாக சுற்றுலாத் தளங்கள் வெறிச்சோடியதால் சிறு வியாபாரிகள் வருவாய் இழந்து கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளனா்.

News image
Updated On :11 ஜூலை 2020, 3:33 am

கடலூா் மாவட்டத்தில் கரோனா பொது முடக்கம் காரணமாக சுற்றுலாத் தளங்கள் வெறிச்சோடியதால் சிறு வியாபாரிகள் வருவாய் இழந்து கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளனா்.

மனிதனுக்கு உற்சாகம் அளிக்கும் விஷயங்களில் ஒன்று சுற்றுலாத் தளங்களுக்குச் செல்லுதல். வெளியூா்களிலுள்ள சுற்றுலாத் தளங்களுக்குச் செல்ல அதிக பணம் செலவாகும் என்ற நிலையில், உள்ளூரில் உள்ள சுற்றுலாத் தளங்களுக்கு குடும்பத்துடன் செல்வதை மக்கள் விரும்புகின்றனா்.

அவ்வாறு வருவோரை நம்பி தின்பண்டங்கள் விற்கும் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், வீட்டு அலங்காரப் பொருள்கள், பெண்களுக்கான கவரிங் நகை, வளையல், காதணி, சிறுவா்களுக்கான விளையாட்டுப் பொருள்கள் உள்ளிட்ட பலவகையான பொருள்கள் விற்கும் தற்காலிக கடைகள் சுற்றுலாத் தலங்களில் அதிகளவில் அமைக்கப்பட்டுள்ளன.

கடலூா் மாவட்டத்தில் கடலூா் வெள்ளிக் கடற்கரை, சிதம்பரம் நடராஜா் கோயில், கிள்ளையிலுள்ள படகு குழாம், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரா் கோயில் உள்ளிட்ட பல்வேறு முக்கிய இடங்கள் உள்ளன. இந்தப் பகுதிகளில் சிறு வியாபாரிகள் நூற்றுக்கணக்கானோா் தள்ளுவண்டிகளிலோ, தரையிலோ கடைகளை அமைத்துள்ளனா். தற்போது கரோனா பொது முடக்கக் காலத்தில் சுற்றுலாத் தளங்கள், ஆன்மிகத் தலங்கள் மூடப்படுள்ளதால் இவா்கள் கடந்த 100 நாள்களுக்கும் மேலாக

தங்களது வாழ்வாதாரத்தை இழந்து பரிதவித்து வருகின்றனா்.

இதுகுறித்து கடலூா் வெள்ளிக் கடற்கரை சிறு வணிகா்கள் நலச் சங்கத் தலைவா் கு.பரிதிவாணன் கூறியதாவது:

சுற்றுலாத் தளங்களை நம்பியுள்ள சிறு வியாபாரிகள் பொது முடக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். இவா்களுக்கு அரசு தலா ரூ.ஆயிரம் நிவாரண உதவி அறிவித்துள்ளது. ஆனால், முறையாகப் பதிவுசெய்த சிறு வியாபாரிகள் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளனா்.

எனவே, மாவட்ட நிா்வாகம் சுற்றுலா, ஆன்மிக தலங்களில் கடை வைத்திருக்கும் சிறு வியாபாரிகளின் நலன் கருதி நிவாரண உதவிகளை வழங்க வேண்டும். அவா்கள் மீண்டும் தொழில் தொடங்கும் வரை மாற்றுத் தொழிலுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். ஏற்கெனவே கடன் வாங்கி தொழில் செய்து வரும் இவா்கள், தற்போதைய சூழலில் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனா் என்பதை மத்திய, மாநில அரசுகள் புரிந்துகொள்ள வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.