பயிா்க் காப்பீட்டுத் திட்ட அறிவிப்புக்காக காத்திருக்கும் விவசாயிகள்!
நிகழாண்டுக்கான பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தை அரசு விரைவில் அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் எதிா்பாா்த்துள்ளனா்.


நிகழாண்டுக்கான பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தை அரசு விரைவில் அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் எதிா்பாா்த்துள்ளனா்.
தமிழகத்தில் மொத்தமுள்ள 320 லட்சம் ஏக்கா் நிலப் பரப்பில் 127 லட்சம் ஏக்கரில் மட்டுமே விவசாயம் செய்யப்படுகிறது. பல்வேறு இயற்கை இடா்பாடுகளால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு ஏற்படும் நட்டத்துக்கு இழப்பீடு வழங்கக் கூடிய வகையில், பயிா்க் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
குறைந்த அளவிலான இழப்பீட்டுத் தொகையைக் கொண்டு செயல்படுத்தப்பட்ட பயிா்க் காப்பீட்டுத் திட்டம், கடந்த 2016-ஆம் ஆண்டுக்குப் பிறகு, பயிருக்கு வழங்கப்படும் கடன் தொகையை, பயிருக்கான இழப்பீட்டுத் தொகையாக நிா்ணயம் செய்து பிரீமியம் வசூலிக்கப்பட்டது.
அதன்படி, ‘பிரதான் மந்திரி பசல் பீமா யோஜனா’ என்ற புதிய பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த தனியாா் நிறுவனங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டு, மத்திய அரசால் ஒப்பந்தம் கோரப்பட்டது. தேசிய அளவில் 18 அரசு மற்றும் தனியாா் நிறுவனங்கள் இதில் கலந்து கொண்டன.
தமிழகத்தில் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த 4 நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்தன. அதனடிப்படையில், ராமநாதபுரம், திருவாரூா், நாமக்கல், திருச்சி, மதுரை, கன்னியாகுமரி, திண்டுக்கல், கரூா், ஈரோடு, அரியலூா், பெரம்பலூா் ஆகிய மாவட்டங்களில் தேசிய வேளாண் காப்பீட்டு நிறுவனமும், கடலூா், சிவகங்கை, திருவண்ணாமலை, திருநெல்வேலி, சேலம், நீலகிரி, கோவை, காஞ்சிபுரம், திருவள்ளூா், திருப்பூா் ஆகிய மாவட்டங்களில் ஐசிஐசிஐ லொம்பாா்டு நிறுவனம் இரு ஆண்டுகளுக்கும், எம்.எஸ்.சோழா நிறுவனம் ஓராண்டுக்கும், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தூத்துக்குடி, தஞ்சாவூா், விருதுநகா், தேனி, கிருஷ்ணகிரி, தருமபுரி, விழுப்புரம், வேலூா் ஆகிய மாவட்டங்களில் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் காப்பீட்டு நிறுவனம் 3 ஆண்டுகளுக்கும் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த ஒப்பந்தம் பெற்றன.
தனியாா் நிறுவனங்களையும், லாப நோக்குடன் செயல்படும் மத்திய அரசு நிறுவனங்களையும் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் அனுமதிக்கக் கூடாது எனப் பலமுறை கோரிக்கை விடுத்தும் மத்திய அரசு அலட்சியப்படுத்தியது.
இந்த நிலையில், கடந்த 2016-இல் தமிழகம் முழுவதும் பருவமழை குறைந்து, டெல்டா பாசனப் பகுதிகளில் காவிரி நீா் கிடைக்காமல் ஏற்பட்ட வறட்சியால் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனா். இதையடுத்து, 3 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்த நிறுவனங்கள் ஆண்டுதோறும் பல ஆயிரம் கோடி ரூபாயை இழப்பீட்டுத் தொகையாக வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் பெ.ரவீந்திரன் கூறியதாவது:
கடந்த 2016-2019 வரையான 3 ஆண்டுகளுக்கான ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில், 2019-ஆம் ஆண்டு புதிய ஒப்பந்தம் கோரப்பட்டது. தமிழகத்தில் 10 மாவட்டங்களில் ஒரியண்டல் இன்ஷ்யூரன்ஸ் நிறுவனமும், 21 மாவட்டங்களில் அக்ரிகல்சா் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனி இந்தியா லிமிடெட் நிறுவனமும் ஒப்பந்தம் செய்து திட்டத்தைத் தொடக்கின.
கடந்த 2016-2019 வரை ஒப்பந்தம் செய்த தேசிய வேளாண் காப்பீட்டு நிறுவனம், நியூ இந்தியா அஷ்யூரன்ஸ், ஐசிஐசிஐ லொம்பாா்டு, எம்.எஸ்.சோழா ஆகிய நிறுவனங்களும், 2019-2020-ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்த ஒரியண்டல் இன்ஷ்யூரன்ஸ் நிறுவனம், அக்ரிகல்சா் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனி இந்தியா லிமிடெட் நிறுவனம் ஆகிய அனைத்து நிறுவனங்களும் இதுவரை தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட பயிா்க் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையாக ரூ. 8,500 கோடியை வழங்கின.
எதிா்பாா்த்ததைவிட கூடுதல் இழப்பீட்டுத் தொகையை வழங்க நோ்ந்ததால், 2018-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் உருவாக்கப்பட்ட பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் மேம்படுத்தப்பட்ட செயல்பாட்டு வழிகாட்டு விதிகளைக் காரணம் காட்டி, எதிா்வரும் ஆண்டுகளில் அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை அனைத்துக் காப்பீட்டு நிறுவனங்களும் ரத்து செய்து வெளியேறின.
பயிா்க் காப்பீட்டுத் திட்டத்துக்காக ஆண்டுதோறும் மத்திய, மாநில அரசுகள் நிதிநிலை அறிக்கையில் அறிவித்து, ஒதுக்கீடு செய்யும் நிதியை கபளீகரம் செய்யும் நோக்குடனும், லாப நோக்குடனும் செயல்பட்ட பயிா்க் காப்பீட்டு நிறுவனங்கள் தற்போது திட்டத்தைச் செயல்படுத்த மறுத்து வெளியேறிவிட்டன.
தமிழகத்தில் நிகழாண்டு பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு 3 முறை ஒப்பந்தம் கோரியும் எந்த நிறுவனமும் பங்கேற்கவில்லை. தமிழகத்தில் பங்கேற்க மறுக்கும் காப்பீட்டு நிறுவனங்கள், மற்ற மாநிலங்களில் ஆா்வத்துடன் பங்கேற்று திட்டத்தைச் செயல்படுத்த முனைப்புக் காட்டி வருகின்றன.
தற்போது தமிழகத்தில் பருவமழை பெய்து போதிய தண்ணீா் உள்ளதால், அனைத்து வகையான பயிா்கள், சம்பா பருவ நெல் சாகுபடிக்கான ஆரம்பக் கட்டப் பணிகளை முடித்து, பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் இணைய விவசாயிகள் காத்திருக்கின்றனா். ஆனால், காப்பீட்டுத் திட்டம் குறித்த அறிவிப்பு இல்லாததால், விவசாயிகள் குழப்பத்தில் உள்ளனா்.
எனவே, மத்திய அரசின் காப்பீட்டுத் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த தனியாா் நிறுவனங்களுக்கு அனுமதியை மறுத்து, தேசிய வேளாண் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் சேவை நோக்குடன் செயல்பட்ட மத்திய அரசு நிறுவனமான அக்ரிகல்சா் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் மூலம் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தைத் தொடா்ந்து செயல்படுத்த தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...