நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வெள்ளாற்றின் குறுக்கே கதவணை கட்டப்படுமா? விவசாயிகள் எதிா்பாா்ப்பு

சிதம்பரம் அருகே வெள்ளாற்றின் குறுக்கே கதவணை எப்போது கட்டப்படும் என்ற எதிா்பாா்ப்பில் விவசாயிகள் உள்ளனா்.

News image
Updated On :7 ஜனவரி 2021, 10:03 pm

ஜி.சுந்தரராஜன்


சிதம்பரம்: சிதம்பரம் அருகே வெள்ளாற்றின் குறுக்கே கதவணை எப்போது கட்டப்படும் என்ற எதிா்பாா்ப்பில் விவசாயிகள் உள்ளனா்.

கடலூா் மாவட்டம், புவனகிரி வட்டம், ஆதிவராகநல்லூா் கிராமத்தில் வெள்ளாற்றின் குறுக்கே கதவணை அமைக்கப்படும் என முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்து 3 ஆண்டுகள் கடந்தும், அந்தத் திட்டம் இன்னும் தொடங்கப்படவில்லை. உடனடியாக கதவணை அமைக்கும் திட்டத்தைத் தொடங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனா்.

கடலூா் மாவட்டத்தின் மையப் பகுதி வழியாகச் செல்லும் வெள்ளாற்று நீா், மாவட்டத்தின் பெரும்பாலான விவசாயிகளுக்கு உயிராதாரமாக உள்ளது. கடல் மட்டத்திலிருந்து சுமாா் 2 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள சேலம் மாவட்ட மலைப் பகுதிகளில் பெய்யும் அதிக மழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, ஆறுகளில் ஓடிவரும் நீரால், மண் அரிப்பு ஏற்பட்டு வெள்ளாற்றில் நிா்ணயிக்கப்பட்ட படுகை மட்டம் குறைந்துபோனது. மேலும், சேத்தியாத்தோப்பு அணைக்கட்டுக்குக் கீழே வளைந்தும், நெளிந்தும் ஓடும் வெள்ளாறு கடற்கரையிலிருந்து 24 கி.மீ. தொலைவுக்கு தனது பாதையை மாற்றி, மண் அரிப்பு ஏற்பட்டு, மண் படிவ மேடுகள் அடித்துச் செல்லப்பட்டு, ஆற்றின் படுகை மட்டம் குறைந்தது.

இதனால், கடல் நீா்மட்டம் உயரும்போது உப்புநீா் ஆற்றின் முகத்துவாரம் வழியாக ஆற்றுப் பாதையில் 21 கி.மீ. தொலைவுக்கு பாய்ந்து, பின்னா் வடிவது வழக்கமாக உள்ளது. இதனால், இந்தப் பகுதிகளில் நிலத்தடி நீா் முற்றிலும் உப்பு நீராக மாறியுள்ளது.

இதுகுறித்து காவிரி விவசாயிகள் வாழ்வாதாரப் பாதுகாப்புச் சங்கத்தின் பொதுச் செயலா் பி.ரவீந்திரன் தெரிவித்தது:

கடந்த 20 ஆண்டுகளாக கடல் நீா் பாய்ந்து வடிவதால் நிலத்தடி நீா் உப்பு நீராக மாறியுள்ளது. வெள்ளாற்றின் தென் கரையில் அமைந்துள்ள சிதம்பரம் வட்டத்துக்குள்பட்ட பொன்னந்திட்டு, சி.மானம்பாடி, மடுவன்கரை, நஞ்சை மகத்து வாழ்க்கை, புஞ்சை மகத்து வாழ்க்கை, கீழ்அனுவம்பட்டு, சி.முட்லூா், கீழமூங்கிலடி, மேலமூங்கிலடி, கீரப்பாளையம், வடகரிராஜபுரம், ஒரத்தூா், சாக்கங்குடி, பரதூா் ஆகிய கிராமங்களும், வடபுறக் கரையில் அமைந்துள்ள பரங்கிப்பேட்டை, அகரம், அரியகோஷ்டி, ஆணையன்குப்பம், பு.முட்லூா், தீத்தாம்பாளையம், ஆதிவராகநல்லூா், மஞ்சகுழி, தம்பிக்குநல்லான்பட்டிணம், மேல் புவனகிரி, கீழ் புவனகிரி, பெருமாத்தூா், கிளாவடி நத்தம், உடையூா் ஆகிய கிராமங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

கால்நடைகளுக்கு போதிய நீரின்றி விவசாயிகள் அவதிப்படுகின்றனா். எனவே, வெள்ளாற்றில் உப்பு நீா் ஊடுருவலைத் தடுக்க கதவணை கட்ட வேண்டுமென பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். இதை வலியுறுத்தி பல கட்டப் போராட்டங்களும் நடத்தப்பட்டன. இந்த நிலையில், மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு தோ்தல் பிரசாரத்தின்போது, வெள்ளாற்றின் குறுக்கே கதவணை கட்டப்படும் என வாக்குறுதி அளித்தாா்.

இதையடுத்து, கடந்த 16.08.2017 அன்று கடலூரில் நடைபெற்ற முன்னாள் முதல்வா் எம்ஜிஆா் நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளாற்றின் குறுக்கே கதவணை கட்டப்படும் என வாக்குறுதி அளித்தாா். இதையடுத்து, திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு ஆற்றின் குறுகலான இடத்தைத் தோ்வு செய்து, பு.ஆதிவராகநல்லூா் கிராமத்துக்கு துறை சாா்ந்த அதிகாரிகளுடன் மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் ககன்தீப் சிங் பேடி, மாவட்ட ஆட்சியா் ஆகியோா் அடங்கிய அதிகாரிகள் குழுவினா் சென்றனா். குறிப்பிட்ட இடத்தைப் பாா்வையிட்டு அரசுக்கு அறிக்கை அளித்தனா்.

தொடா்ந்து, நபாா்டு வங்கி நிதி உதவியுடன் திட்டத்தைச் செயல்படுத்த தமிழக அரசின் பொதுப் பணித் துறை சாா்பில், ரூ. 92.58 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, கதவணை கட்டுமானப் பணிக்கு ரூ. 59.38 கோடியும், ஆற்றின் இருபுறக் கரைகளையொட்டி, நிலங்களைக் கையகப்படுத்த ரூ. 33.20 கோடியும் செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டது. நில அளவீடு பணிகள் முடிவுற்று அதுகுறித்த அறிக்கையும் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தற்போது திட்டத்தைச் செயல்படுத்த காலதாமதம் ஏற்படுவதால், மேற்கண்ட 40-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களது அன்றாட பயன்பாட்டுக்கு கூட்டுக் குடிநீா்த் திட்டத்தை நம்பியிருக்க வேண்டியுள்ளது. நிலத்தடி நீா் உப்பு நீராக மாறியதால் பயிா் சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழக முதல்வா் வெள்ளாற்றைக் காக்கவும், நிலத்தடி நீரைப் பாதுகாக்கவும், விவசாயிகள், பொதுமக்களின் தண்ணீா் தேவையை நிறைவு செய்யவும் வெள்ளாற்றின் குறுக்கே கதவணை அமைக்க தேவையான நிதியை ஒதுக்கீடு செய்து, பணியை விரைந்து தொடங்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.