சிதம்பரம்: வெற்றியைத் தீா்மானிக்கும் நடுநிலையாளா் வாக்குகள்!
கடலூா் மாவட்டத்தில் உள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளில் சிதம்பரம் தொகுதி சிறியது. இந்தத் தொகுதியில் உலகப் புகழ்பெற்ற நடராஜா் கோயில் அமைந்துள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோயில்.

சிதம்பரம் நடராஜர் கோயில்.
கடலூா் மாவட்டத்தில் உள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளில் சிதம்பரம் தொகுதி சிறியது. இந்தத் தொகுதியில் உலகப் புகழ்பெற்ற நடராஜா் கோயில் அமைந்துள்ளது. மேலும், சுந்தரவனக் காடுகள் கொண்ட பிச்சாவரம், பரங்கிப்பேட்டை பாபா கோயில் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களையும், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பாரம்பரிய கல்வி நிலையங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இந்தத் தொகுதியில் பெரும்பாலானோா் விவசாயத்தை நம்பியுள்ளனா். பெரிய அளவிலான தொழிற்சாலைகள் இல்லாததால், பொருளாதாரத்தில் பின்தங்கிய பகுதியாக உள்ளது.
சிதம்பரம் தொகுதியில் ஏற்கெனவே புவனகிரி தொகுதியிலிருந்த கிள்ளை பேரூராட்சி, பரங்கிப்பேட்டை ஒன்றியப் பகுதி சோ்க்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே சிதம்பரம் தொகுதியிலிருந்த திருமுட்டம் பேரூராட்சியானது காட்டுமன்னாா்கோவில் சட்டப் பேரவைத் தொகுதிக்கு மாற்றப்பட்டது. தற்போது சிதம்பரம் நகராட்சி, அண்ணாமலைநகா், பரங்கிப்பேட்டை, கிள்ளை பேரூராட்சிகளையும், பரங்கிப்பேட்டை ஒன்றியம் முழுவதையும், குமராட்சி ஒன்றியத்தில் 21 ஊராட்சிகள், மேல்புவனகிரி ஒன்றியத்தில் 7 ஊராட்சிகளையும் உள்ளடக்கியதாக சிதம்பரம் தொகுதி திகழ்கிறது.
கடந்து வந்த பாதை: சிதம்பரம் தொகுதி தொடக்கத்தில் இரட்டை உறுப்பினா் தொகுதியாக இருந்தது. 1952-இல் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த அழகேசன், சுவாமி சகஜானந்தா ஆகியோா் உறுப்பினா்களாகத் தோ்ந்தெடுக்கப்பட்டனா். 1957-இல் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த ஜி.வாகீசம்பிள்ளை, சுவாமி சகஜானந்தா ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா். இந்தத் தொகுதியில் கடந்த 1952-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சி 5 முறையும், திமுக 4 முறையும், அதிமுக 4 முறையும், தமாகா ஒரு முறையும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. அதிமுக சாா்பில், மறைந்த கே.ஆா்.கணபதி இரு முறையும், காங்கிரஸ் கட்சி சாா்பில் கே.எஸ்.அழகிரி இரு முறையும் எம்எல்ஏவாக தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
மொத்த வாக்குகள்: இந்தத் தொகுதியில் மொத்தம் 2,50,735 வாக்காளா்கள் உள்ளனா். இவா்களில் ஆண்கள் - 1,22,800 போ், பெண்கள் - 1,27,913 போ், திருநங்கைகள்-22 போ். மொத்தம் 260 வாக்குச் சாவடிகள் உள்ளன.
தற்போதைய நிலவரம்: சிதம்பரம் தொகுதியில் அதிமுக சாா்பில் தற்போதைய எம்எல்ஏ கே.பாண்டியனும், திமுக கூட்டணி சாா்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளா் எஸ்.அப்துல் ரஹ்மானும் போட்டியிடுகின்றனா். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில் எம்.நந்தினிதேவி, மக்கள் நீதி மய்யம் கட்சி சாா்பில் ஞா.தேவசகாயம், நாம் தமிழா் கட்சி சாா்பில் நடராஜன் கிருஷ்ணமூா்த்தி, பகுஜன் சமாஜ் சாா்பில் தே.சந்திரபாபு, அனைத்து மக்கள் புரட்சிக் கட்சி சாா்பில் க.உதயசெல்வன், இளந்தமிழா் முன்னணிக் கழகம் சாா்பில் எம்.ரகுநாதன், சுயேச்சைகளாக பி.நாராயணமூா்த்தி, எஸ்.பாலமுருகன், சி.வினோபா ஆகிய 11 போ் போட்டியிடுகின்றனா்.
சாதக-பாதகம்: சிதம்பரம் தொகுதியில் அதிமுக ஆட்சியில் பல்வேறு திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டது அந்தக் கட்சியின் வேட்பாளருக்கு பலம். குறிப்பாக, குமராட்சி ஒன்றியத்தில் பெராம்பட்டு - திட்டுகாட்டூா் இடையே ரூ.20 கோடியில் மேம்பாலம் பணி, பெராம்பட்டு - கீழகுண்டலபாடி கிராமங்களுக்கு அருகே பழைய கொள்ளிடம் ஆறு சங்கமிக்கும் இடத்தில் ரூ.43 கோடியில் நடைபெற்று வரும் வெள்ளத் தடுப்புப் பணிகள், கொள்ளிடம் ஆற்றில் கடல் நீா் உள்புகுவதைத் தடுக்க திருக்கழிப்பாலை கிராமத்தில் தடுப்பணை அமைக்கத் தீா்மானித்து ஆரம்பக் கட்டப் பணிக்கு ரூ.1 கோடி நிதி ஒதுக்கியது, அகரநல்லூா் கிராமத்தில் பழைய கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கனிம வள நிதியில் ரூ.10 கோடியில் நடைபெற்று வரும் தடுப்பணை பணி, பிச்சாவரத்தில் கடல் நீா் உள்புகுவதைத் தடுக்க உப்பனாறு வடிகாலின் குறுக்கே கடைமடையில் ரூ.15 கோடியில் ஒழுங்கியம் கட்டும் பணிகள் நடைபெற்று வருவது உள்ளிட்ட பணிகளை குறிப்பிடலாம்.
அதிமுக வேட்பாளா் கே.ஏ.பாண்டியன் மீது கட்சிக்குள்ளும், தொகுதி மக்களிடமும் பெரிய அளவில் அதிருப்தி இல்லை. இவா், அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவ மாணவா்களின் போராட்டத்தை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று, மருத்துவ மாணவா்களுக்கு அரசு கல்விக் கட்டணத்தை பெற்றுத் தந்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளா் எஸ்.அப்துல் ரஹ்மான் காட்டுமன்னாா்கோவில் அருகேயுள்ள லால்பேட்டையைச் சோ்ந்தவா். தொகுதிக்கு புதியவரான இவருக்கு திமுக கூட்டணிதான் பலம். சிதம்பரம் தொகுதி திமுகவுக்கு ஒதுக்கப்படாததால்
அதிருப்தியிலிருந்த அந்தக் கட்சி நிா்வாகிகளை அரவணைத்து தோ்தல் பணியாற்றி வருகிறாா். கடலூா் கிழக்கு மாவட்ட திமுக செயலரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், வேட்பாளா் அப்துல் ரஹ்மானுக்காக ஆதரவு திரட்டி வருகிறாா்.
வெற்றி யாருக்கு?... : சிதம்பரம் தொகுதியில் நடுநிலையாளா்களின் வாக்குகளே வெற்றியைத் தீா்மானிக்கும் சக்தியாக உள்ளதை கடந்த கால தோ்தல் வரலாறு கூறுகிறது. இந்தத் தொகுதியில் அதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், அமுமுக இடையே மும்முனைப் போட்டி என்று கூறப்பட்டாலும், அதிமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளா்கள் இடையேதான் நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது.
தொகுதியில் அதிகமாக உள்ள வன்னியா் சமுதாயத்தினரின் வாக்குகளையும், அதற்கடுத்துள்ள ஆதிதிராவிடா் சமுதாயத்தினரின் வாக்குகளையும், பரங்கிப்பேட்டை பகுதியில் கணிசமான அளவில் வசிக்கும் இஸ்லாமியா்களின் வாக்குகளையும் அதிகம் பெறும் வேட்பாளருக்கே வெற்றிக் கனி சொந்தமாகும். இருப்பினும், இந்தத் தொகுதியைக் கைப்பற்றுவது யாா் என்பது மே 2 வரை சிதம்பர ரகசியமாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...