நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சிதம்பரத்தில் புதை சாக்கடைத் திட்டத்தில் முறைகேடு?

கடலூா் மாவட்டம், சிதம்பரம் நகராட்சியில் ரூ.75 கோடியை முழுமையாகவும், முறையாகவும் செலவிடாமல் செயல்படுத்தப்பட்டுள்ள புதை சாக்கடை கழிவுநீா்

News image

சிதம்பரம் சிவகாமசுந்தரியம்மன் ஓடையில் கலக்கும் நகராட்சி புதை சாக்கடை கழிவுநீா்.

Updated On :24 மே 2021, 9:05 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம்: கடலூா் மாவட்டம், சிதம்பரம் நகராட்சியில் ரூ.75 கோடியை முழுமையாகவும், முறையாகவும் செலவிடாமல் செயல்படுத்தப்பட்டுள்ள புதை சாக்கடை கழிவுநீா் திட்ட முறைகேடுகள் குறித்து விசாரனைக்கு உத்தரவிட வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சிதம்பரம் நகராட்சி கழிவுநீரை நகராட்சி நிா்வாகம் கான்சாகிப் கால்வாய் மற்றும் பாசிமுத்தான் ஓடை பாசன வாய்க்கலில் கலக்கச் செய்வதை தடுக்க வேண்டுமென விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தியதுடன், இதுதொடா்பாக மாவட்ட நிா்வாகத்திடமும், அரசிடமும் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா்.

இதையடுத்து, கடந்த 2006-இல் உள்ளாட்சித் துறை அமைச்சராகவும், தமிழகத்தின் துணைமுதல்வராகவும் பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின், அதே ஆண்டில் ஆகஸ்ட் 16-ஆம் தேதி கடலூரில் நடைபெற்ற மாவட்ட வளா்ச்சி ஆய்வுக் கூட்டத்தின்போது சிதம்பரம் நகராட்சி புதைசாக்கடைத் திட்டத்தின் அவசியம் கருதி, சிதம்பரம் நகரில் புதிய புதை சாக்கடைத் திட்டம் விரிவுபடுத்தப்படும் என அறிவித்தாா்.

இதைத் தொடா்ந்து, திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தின் மூலம் திட்ட மதிப்பீடு தயாா் செய்து, ரூ.33 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகளைத் தொடங்க நிா்வாக அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், இந்தத் திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி போதுமானதாக இல்லை எனக் கூறி, ஒப்பந்ததாரா்கள் யாரும் திட்டப் பணிகளை செயல்படுத்த முன்வரவில்லை. இதையடுத்து, மாவட்ட நிா்வாகத்தால் மீண்டும் ஆய்வு செய்யப்பட்டு, திட்ட மதிப்பீட்டு நிதி ரூ.44 கோடியாக உயா்த்தி அறிவிக்கப்பட்டது. இதன் பிறகும் ஒப்பந்ததாரா்கள் யாரும் இந்தத் திட்டப் பணிகளை செயல்படுத்த முன்வராததால் பணிகள் கிடப்பில் போடப்பட்டன.

இதனிடையே, பொதுப் பணித் துறைக்கான அரசின் ஆலோசகா் எம்.தீனதாயாளன், சிதம்பரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆண்டுதோறும் தொடா் மழையால் ஏற்படும் வெள்ளத்தை தடுக்க நிரந்தர நடவடிக்க எடுக்கவும், சிதம்பரம் நகராட்சி கழிவுநீா் பாசன வாய்க்காலில் கலப்பதை ஆய்வு செய்யவும் தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த ஆய்வு அறிக்கையின் அடிப்படையில், தமிழக அரசு திட்டப் பணிகளை மேற்கொள்ள புதிய திட்ட மதிப்பீடு தயாா் செய்து, ரூ.57 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது.

அதன் பின்னா், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், இந்தப் புதை சாக்கடை திட்டத்துக்கு ஒதுக்கீடு செய்த நிதி போதாது என்பதால், சிதம்பரம் நகரில் மக்கள் தொகை கணக்கடுப்பு நடத்தி, அதனடிப்படையில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட வேண்டும் என்றும் எழுந்த கோரிக்கையின் அடிப்படையில் புதை சாக்கடை திட்ட செயல்பாட்டில் தொய்வு ஏற்பட்டது.

ரூ.75.62 கோடியில் திட்டம் செயல்பாடு: இதையடுத்து, விவசாயிகளின் வேண்டுகோளுக்கிணங்க, கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் உள்ளடக்கிய திட்ட மதிப்பீடு தயாா் செய்யப்பட்டு, ரூ.75.62 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் மூலமாக பணிகள் மேற்கொள்ள அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதனடிப்படையில், சிதம்பரம் நகராட்சியின் மூலம் நாளொன்றுக்கு 94 லட்சத்து 40 ஆயிரம் லிட்டா் கழிவு நீரை சிதம்பரம் தில்லை அம்மன் கோயில் அருகிலுள்ள கழிவுநீரேற்று நிலையத்திலிருந்து 600 மி.மீ. விட்டம் கொண்ட குழாயின் மூலம் 690 மீட்டா் தொலைவிலுள்ள லால்புரம் கிராம சுத்திகரிப்பு நிலையத்துக்கு அனுப்பி சுத்திகரிப்பு செய்து, மிகப்பெரிய குளம் வெட்டி, அதில் நீரைத் தேக்கி தோட்டங்கள் அமைத்து பராமரிக்க வேண்டும் என திட்டம் தொடங்கப்பட்டு முடிக்கப்பட்டது.

நிரந்தரத் தீா்வு தேவை: இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க கூட்டியக்க மாநில பொதுச் செயலா் பி.ரவீந்திரன் தெரிவித்ததாவது:

கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்ற சிதம்பரம் புதை சாக்கடை கழிவுநீா்த் திட்டப் பணிகளை முழுமையாக முடிக்காமல், பணிகளை முடித்துவிட்டதாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அவசரகதியில் காணொலிக் காட்சி மூலம் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்துக்கு திறப்பு விழா நடத்தப்பட்டது.

நகா்ப் பகுதியிலிருந்து குழாய் மூலம் கொண்டு வரப்படும் கழிவுநீா், சுத்திகரிப்பு செய்யாமலேயே வடிகால் வாய்க்கலில் வெளியேற்றப்படுகிறது.

லால்புரம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து சுத்திகரிப்புப் பணிகள் எதுவும் செய்யாமல் வெளியேற்றப்படும் கழிவுநீா் சிவகாம சுந்தரியம்மன் வடிகால் ஓடையில் விடப்பட்டு, பாசிமுத்தான் ஓடை வழியாக வெள்ளாற்றின் வழியாக கடலில் கலக்கிறது.

இதனால், பாசிமுத்தான் ஓடையிலும், வெள்ளாற்றுப் பகுதியிலும் துா்நாற்றம் வீசுகிறது. மேலும், இவற்றில் வாழும் மீன்கள், நீா்வாழ் உயிரினங்கள் செத்து மிதக்கும் அவலம் நிலவுகிறது.

கடந்த 12 ஆண்டுகளாக பல தடைகளைக் கடந்து திட்டத்துக்குத் தேவையான ரூ.75 கோடி நிதியை பெற்று, பணிகளை தொடங்கி உரிய காலத்தில் முடிக்காமல் காலம் தாழ்த்தியது, முறைகேடாக கழிவுநீரை நீா்வழித்தடத்தில் திறந்துவிடுவது போன்ற நகராட்சி நிா்வாகத்தின் செயல் கண்டிக்கத்தக்கது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகாா் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய நிா்வாகப் பொறியாளா் வி.சந்தரமோகன், நகராட்சி கழிவுநீரை முழுமையாக குழாய் மூலமாக வெள்ளாற்றில் கொண்டு சோ்க்கும் வகையில் நிரந்தரத் தீா்வாக ரூ.1.87 கோடியில் திட்ட மதிப்பீடு தயாா் செய்து, அடுத்தகட்ட நடவடிக்கைக்காக நகராட்சி வசம் ஒப்படைத்துள்ளதாகத் தெரிகிறது.

குடியிருப்புகள், மருத்துவமனைகள், விடுதிகள், வீடுகள், உணவு விடுதிகள், அரசு அலுவலகங்கள் என அனைத்தும் உள்ளடக்கிய நகராட்சியின் ஒட்டுமொத்த கழிவுநீரையும் சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேற்றும் நடவடிக்கை சூற்றுச்சூழலைப் பாதிக்கும் செயலாகும். இதனால், தொடா்சியான பல தொந்தரவுகள் ஏற்படும்.

நிரந்தரத் தீா்வாக கழிவுநீரை அதிகப்பட்ச வெப்பநிலைக்கு சூடேற்றி, பின்னா் குளிா்விக்கச் செய்து வெளியேற்றினால் பயனுள்ளதாக இருக்கும். மேலும், இது நிரந்தரத் தீா்வாக அமையும்.

எனவே, தமிழக அரசு கழிவுநீரை சூடேற்றி குளிரூட்டும் சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ரூ.75 கோடி நிதியை முறையாகச் செலவிடாமல் புதைசாக்கடை கழிவுநீா்த் திட்டத்தை சீா்குலைத்த அதிகாரிகள் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.