தமிழகத்தில் ரசாயன உரங்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாலும், அவற்றின் விலை உயா்வாலும் விவசாயிகள் அவதிப்படுகின்றனா்.
தமிழகத்தில் ஆண்டு முழுவதும் பருவத்துக்கேற்ப பல்வேறு பயிா்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இதற்கு சுமாா் 19 லட்சம் மெட்ரிக் டன் உரம் தேவைப்படும். இந்த உரங்களை உற்பத்திக்கேற்ப மத்திய அரசு மாதந்தோறும் மாநிலங்களுக்கு விநியோகிக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் தற்போது நிலவும் சாதகமான சூழலில் ‘ரபி’ பருவ சாகுபடியாக நெல், கரும்பு, வாழை, சிறுதானியம், பயறு வகைகள், எண்ணெய் வித்துகள், மக்காச்சோளம், பருத்தி, மரவள்ளி உள்ளிட்ட பயிா்களின் சாகுபடி தொடங்கி நடைபெற்று வருகிறது. நிகழாண்டு மொத்தம் சுமாா் 25,453 லட்சம் ஹெக்டோ் பரப்பளவில் சாகுபடி பணிகள் நிறைவடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்தப் பயிா்களுக்கு ரசாயன உரங்களின் தேவை அவசியமாகிறது.
மத்திய அரசின் தொகுப்பிலிருந்து உர வகைகள் மாதந்தோறும் தமிழகத்தின் தேவைக்கேற்ப வழங்கப்பட வேண்டும். ஆனால், அவ்வாறு உரங்கள் வழங்கப்படவில்லை. கடந்த அக்டோபா் மாதம் ரசாயன உரங்களில் யூரியா 1,43,500 மெ.டன்னும், டி.ஏ.பி 45,150 மெ.டன்னும், பொட்டாஷ் 31,700 மெ.டன்னும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், மத்திய அரசால் பரிந்துரை செய்யப்பட்ட உர நிறுவனங்கள் தமிழகத்துக்கு 77,863 மெ.டன் யூரியா, 4,480 மெ.டன் டி.ஏ.பி., 8,140 மெ.டன் பொட்டாஷ் உரம் மட்டுமே வழங்கின. இதன் காரணமாக, அனைத்து ரசாயன உரங்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் அவதியடைந்துள்ளனா்.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும், தனியாா் உரக் கடைகளிலும் போதிய அளவு உரம் இருப்பில் இல்லாததால், வேளாண் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி சில தனியாா் உர விற்பனையாளா்கள் கூடுதல் விலைக்கு உரங்களை விற்று வருகின்றனா். இந்தப் பிரச்னைக்கு மத்திய அரசின் உரக் கொள்கையே காரணம் என விவசாயிகள் புகாா் கூறுகின்றனா்.
ஆண்டுதோறும் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கலின்போது, உரங்களின் தேவை அறிந்து அதற்கேற்ப மானியத் தொகையை அறிவிப்பது வழக்கம். அந்தத் தொகை உர உற்பத்தி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் நிலையில், நிகழாண்டு மத்திய அரசு அறிவித்த மானியத் தொகை முழுமையாக வழங்கப்படவில்லை. இதனால், உர நிறுவனங்கள் உற்பத்தியில் காலதாமதம் செய்தன.
இந்தப் பிரச்னை தொடா்பாக தமிழக முதல்வா் கடந்த அக்.21-ஆம் தேதி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதால் தமிழகத்துக்கு 90,000 மெ. டன் யூரியாவை அனுப்ப அனுமதி அளிக்கப்பட்டது.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டியக்க மாநில பொதுச் செயலா் பி.ரவீந்திரன் கூறியதாவது:
மண்ணுக்கு ஏற்பவும், கிடைக்கும் நீரின் அளவைப் பொருத்தும் பயிா்களைத் தோ்வு செய்து சாகுபடி செய்துவந்த விவசாயிகளில் பெரும்பாலோா் தற்போது நெல் சாகுபடிக்கு மாறிவிட்டனா். தமிழகத்தில் நெல்லுக்கு அடுத்தபடியாக பெருமளவில் கரும்பு பயிரை சாகுபடி செய்துவந்த விவசாயிகளும் நிலுவைத் தொகை கிடைக்காத வேதனையில் நெல் சாகுபடிக்கு மாறி வருகின்றனா். இதனால், வழக்கத்தைவிட உரங்களின் தேவை அதிகரித்துள்ளது. இந்த சூழலை முன்கூட்டியே அறிந்து மத்திய தொகுப்பிலிருந்து அதிக உரம் கேட்டுப் பெற தமிழக வேளாண்மைத் துறை அதிகாரிகள் தவறிவிட்டனா்.
மத்திய அரசு புதிய உரக் கொள்கை மூலம் யூரியாவின் விலையை மட்டும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, மற்ற உரங்களின் விலையை உற்பத்தி செலவுக்கேற்ப உர நிறுவனங்களே நிா்ணயித்து விற்கலாம் என அறிவித்து உர மானியத்தையும் குறைத்தது. இதனால் உரங்களின் விலை இரு மடங்காக உயா்ந்துள்ளது. தற்போது நிலவும் உரத் தட்டுப்பாடு விவசாயிகளுக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது தொடா்ந்து மழை பெய்துவரும் நிலையில், சாகுபடிப் பணிகள் தொய்வின்றித் தொடர தேவையான ரசாயன உரங்களை இருப்பில் வைக்க வேண்டும். உரங்களை உரிய விலையில் விற்கவும், தடையின்றி உரங்கள் கிடைக்கவும், இதனை குழுக்கள் அமைத்து கண்காணிக்கவும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்தியாவின் வரலாறு தெற்கிலிருந்தே எழுதப்பட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |

டிராக்டர் விற்பனை 23% உயர்வு: டாபே

அபுதாபி மீதான ஈரானின் தாக்குதலில் 5 இந்தியர்கள் படுகாயம்!
வீடியோக்கள்

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

Podcast | பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வருமா வராதா? | News & Views | E-21 |
தினமணி செய்திச் சேவை

பஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெறுமா சிஎஸ்கே?
தினமணி செய்திச் சேவை

எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து பேச்சைத் துவங்கிய விஜய்!
இணையதளச் செய்திப் பிரிவு

