சொத்து தகராறில் இரட்டைக் கொலை வழக்கு: தந்தை-மகனுக்கு ஆயுள் தண்டனை

சொத்து தகராறில் உறவினர்கள் இரண்டு பேரை கொலை செய்ததாக தந்தை-மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கடலூர்: சொத்து தகராறில் உறவினர்கள் இரண்டு பேரை கொலை செய்ததாக தந்தை-மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகிலுள்ள சாத்தப்பாடியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி மகன்கள் கணேசன் (62), ராஜா என்ற விஜயன் (58). இவர்களுக்கு திருமணமாகி தனித்தனியாக வசித்து வரும் நிலையில் பூர்வீக சொத்து பாகம் பிரிக்கப்படாமல் இருந்து வந்ததாம். இதனை, விஜயன் குடும்பத்தினர் கவனித்து வந்தனராம். 

இந்நிலையில், மலேசியாவில் வேலைப்பார்த்து வந்த கணேசனின் மகன் குருசேவ் (30) என்பவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுத்ததால் அவர் ஊருக்கு திரும்பினராம். எனவே, பூர்வீக இடத்தில் அவருக்கு வீடு கட்டுவதற்கு இடம் கேட்டாராம். அதற்கு, விஜயன் இடம் தர மறுத்ததால் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில், இப்பிரச்னை தொடர்பாக 8-4-2018 அன்று கணேசன், குருசேவ் மற்றும் உறவினரான சீர்காழியைச் சேர்ந்த சௌந்தரராஜன் மகன் அபினாஷ் (24) ஆகியோர் விஜயன் வீட்டிற்குச் சென்றுள்ளனர். அப்போது, ஏற்பட்ட தகராறில் விஜயன் அவரது மகன் கோபிநாத் (24) ஆகியோர் சேர்ந்து மூன்று பேரையும் தாக்கியதோடு, கத்தியால் வெட்டியுள்ளனர். இதில், குருசேவ், அபினாஷ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். இதுகுறித்து புவனகிரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

இந்த வழக்கின் விசாரணை கடலூரிலுள்ள முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கில், நீதிபதி ஜி.செந்தில்குமார் இன்று தீர்ப்பு கூறினார். அதில், கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட விஜயன், கோபிநாத் ஆகியோரின் குற்றங்கள் உறுதியானதால் அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்தார். மேலும், ரூ.3000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். 

இதனையடுத்து, அவர்கள் இருவரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். வழக்கில், அரசு தரப்பு வழக்குரைஞர் எஸ்.பி.கதிர்வேலன் ஆஜராகி வாதாடினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com