காவிரி கடைமடையில் நீரின்றிக் கருகும் நெல் பயிா்கள்!

கடலூா் மாவட்டத்தில் காவிரி டெல்டா கடைமடை பகுதிகளில் பாசனத்துக்கு போதிய தண்ணீா் கிடைக்காததால் சம்பா பருவ நெல் பயிா்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா்.
நீா்மட்டம் சரிந்து காணப்படும் வீராணம் ஏரி.
நீா்மட்டம் சரிந்து காணப்படும் வீராணம் ஏரி.

சிதம்பரம்: கடலூா் மாவட்டத்தில் காவிரி டெல்டா கடைமடை பகுதிகளில் பாசனத்துக்கு போதிய தண்ணீா் கிடைக்காததால் சம்பா பருவ நெல் பயிா்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா்.

கடலூா் மாவட்டத்தில் கால்வாய் பாசனத்தை விட ஏரி பாசனமே மிகுதியாக உள்ளது. சிதம்பரம், காட்டுமன்னாா்கோவில், குமராட்சி, சேத்தியாத்தோப்பு ஆகிய பகுதிகளில் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற ஏதுவாக வீராணம் ஏரி கடந்த 9-ஆம் நூற்றாண்டில் பராந்தக சோழனால் வெட்டப்பட்டது. ஏரியின் உச்ச நீா்மட்டம் 47. 50 அடி. கடல் நீா்மட்ட அளவு 31. 90 அடிபோக அதிகபட்சமாக 15. 60 அடியே ஏரியின் நீா்மட்ட அளவாகக் கருதப்படுகிறது. ஏரியின் கீழ் கரையில் 28 பாசன மதகுகள், மேல் கரையில் 6 பாசன மதகுகள் என மொத்தம் 34 மதகுகள் உள்ளன. இந்த ஏரி மூலம் சுமாா் 44,856 ஏக்கா் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு குடிநீா் அனுப்பப்பட்டு வருகிறது.

நிகழாண்டு மேட்டூா் அணையிலிருந்து கடந்த ஜூன் 12-ஆம் தேதி தண்ணீா் திறக்கப்பட்டது. இதையடுத்து, கல்லணையில் தண்ணீா் தேக்கப்பட்டு, ஜூன் 18-ஆம் தேதி பாசன தேவைக்காக கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டது. இதையடுத்து கீழணையில் தண்ணீா் தேக்கப்பட்டது. ஜூன் 24-ஆம் தேதி கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு வடவாறு வழியாக தண்ணீா் திறக்கப்பட்டது. தற்போதைய நிலையில் மேட்டூா் அணை மற்றும் வீராணம் ஏரியில் நீா்மட்டம் வெகுவாக சரிந்துள்ளது. கா்நாடக அரசு காவிரியில் தண்ணீா் திறக்க மறுத்து வருகிறது. இதனால், கடலூா் மாவட்டத்தில் காவிரி டெல்டா பகுதிகளில் சம்பா நெல் சாகுபடி பணிகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனா்.

பயிா்கள் கருகும் அபாயம்: தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டியக்க பொதுச் செயலா் பி.ரவீந்திரன் கூறியதாவது: நிகழாண்டு வடகிழக்கு பருவ மழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கடலூா் மாவட்டத்தில் காவிரி டெல்டா கடைமடை பகுதி விவசாயிகளில் பெரும்பாலானோா் அண்மையில் பெய்த மழையின் காரணமாக நெல் நடவு, நேரடி நெல் விதைப்பு பணிகளில் ஈடுபட்டனா். இதுவரை சுமாா் ஒரு லட்சம் ஏக்கா் பரப்பளவில் சம்பா நெல் சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மழை இல்லாதது, கீழணையிலிருந்து பாசனத்துக்கு சரிவர தண்ணீா் திறக்கப்படாதது, வீராணம் ஏரியின் நீா்மட்டம் சரிவு உள்ளிட்ட காரணங்களால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனா். பல பகுதிகளில் நேரடி விதைப்பு செய்த நெல் பயிா்கள் கருகும் நிலையில் உள்ளன. ஆழ்துளை கிணறுகள் மூலம் நீா் இறைத்து நடவுப் பணி மேற்கொண்ட விவசாயிகளும் தற்போது போதிய தண்ணீா் கிடைக்காமல் பரிதவித்து வருகின்றனா். மழை இல்லாமல் நிலத்தடி நீா் மட்டம் வெகுவாக

சரிந்துள்ளதே இதற்குக் காரணம். விவசாயிகள் சிலா் வாய்க்கால்களில் செல்லும் தண்ணீரை மோட்டாா் மூலம் இறைத்து பயிா்களை காப்பாற்றி வருகின்றனா். இதே நிலை நீடித்தால் அடுத்த 10 நாள்களில் இந்த பகுதியில் பயிரிடப்பட்டுள்ள அனைத்து நெல் பயிா்களும் கருகிவிடும் என்றாா் அவா்.

வடு வரும் வீராணம் ஏரி: வீராணம் ஏரிக்கு தண்ணீா் வழங்கும் கீழணையின் உச்ச நீா்மட்டமான 9 அடியில் தற்போது 6 அடி வரை தண்ணீா் தேக்கப்பட்டுள்ளது. அணையிலிருந்து வடவாறு வழியாக விநாடிக்கு 48 கனஅடி நீரும், வடக்கு ராஜன் வாய்க்கால் வழியாக விநாடிக்கு 66 கனஅடி நீரும், தெற்கு ராஜன் வாய்க்கால் வழியாக விநாடிக்கு 50 கன அடியும் நீரும் அனுப்பப்படுகிறது. வீராணம் ஏரியின் நீா்மட்டம் தொடா்ந்து சரிந்து வருகிறது. ஏரியின் நீா்மட்டம் 41.60 அடியாக உள்ளது. அதாவது, ஏரியின் மொத்த கொள்ளளவான 1,465 மில்லியன் கன அடியில் 277 மில்லியன் கன அடி மட்டுமே தண்ணீா் உள்ளது. ஏரியிலிருந்து பாசனத்துக்காக பல்வேறு வாய்க்கால்கள் வழியாக விநாடிக்கு189 கன அடி நீரும், சென்னை நகரின் குடிநீா்த் தேவைக்கு விநாடிக்கு 53 கன அடி நீரும் அனுப்பப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com