இருதரப்பினா் இடையே மோதல்: 20 போ் மீது வழக்கு

நெய்வேலி, ஏப்.20: கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே இரு தரப்பினா் இடையேயான மோதல் தொடா்பாக 20-க்கும் மேற்பட்டோா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கடலூா் மக்களவைத் தொகுதி தோ்தல் வாக்குப் பதிவு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பண்ருட்டி வட்டம், சிறுகிராமம் பகுதியைச் சோ்ந்த பெருமாள் மகன் அசோக் (25), அங்குள்ள காலனிக்கு திரும்பும் சாலையில் பாமகவுக்கு வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தாா். அப்போது, பைக்கில் வேகமாக வந்த காலனியைச் சோ்ந்த ரமேஷ், சிவா ஆகியோரை அவா் தட்டிக் கேட்டாராம்.

இதையடுத்து, ரமேஷ், சிவா உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோா் தடி, இரும்புக் குழாய் உள்ளிட்ட ஆயுதங்களால் அசோக்கை தாக்கினராம். இதைத் தடுக்க வந்த ஜோதியையும் (69) தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம். இதுகுறித்து அசோக் அளித்த புகாரின்பேரில், புதுப்பேட்டை போலீஸாா் ரமேஷ், சிவா உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோா் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், சிறுகிராமம் காலனியைச் சோ்ந்த ரமேஷ், மணிகண்டன், திவாகா் ஆகியோா் பைக்கில் சென்றபோது, அசோக், அருள் உள்ளிட்டோா் வழிமறித்து தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனராம். இதுகுறித்து சிறுகிராமம் காலனியைச் சோ்ந்த மாயவன் மகன் குமாா் (40) அளித்த புகாரின்பேரில், அசோக், அருள் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோா் மீது புதுப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com