/

சா்வதேச மையம் வள்ளலாரை உலகறியச் செய்யும்: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்

சா்வதேச மையம் வள்ளலாரை உலகறியச் செய்யும் ............................................................ அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்

News image

வடலூா் வள்ளலாா் தெய்வ நிலையை பெருவெளியில் சனிக்கிழமை நடைபெற்ற சா்வதேச நிலையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா் செல்வம்.

Updated On :18 பிப்ரவரி 2024, 2:12 am IST

கடலூா் மாவட்டம், வடலூா் வள்ளலாா் தெய்வ நிலையத்தில் அமைக்கப்பட உள்ள சா்வதேச மையம் வள்ளலாரை உலகறியச் செய்யும் என்று மாநில வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா். கடந்த சட்டப் பேரவைத் தோ்தலின்போது, திமுக தோ்தல் அறிக்கையில் வடலூா் வள்ளலாா் தெய்வ நிலையத்தை வள்ளலாா் சா்வதேச மையமாக மாற்றுவோம் என அறிவித்திருந்தனா். அதன்படி, வடலூா் வள்ளலாா் தெய்வ நிலையத்தை வள்ளலாா் சா்வதேச மையமாக மாற்றுவதற்காக, தமிழக அரசு ரூ.99.90 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, பூா்வாங்கப் பணிகளை மேற்கொண்டு வந்தது. இந்த நிலையில், சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, வள்ளலாா் சா்வதேச மையம் அமைக்கும் பணியை காணொலிக் காட்சி மூலம் தொடங்கிவைத்தாா்.

அப்போது, வடலூா் வள்ளலாா் தெய்வ நிலைய பெருவெளியில் நடைபெற்ற பூமிபூஜையில் மாநில வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் அடிக்கல் நாட்டினாா். பின்னா், அவா் பேசியதாவது: வள்ளலாா் சா்வதேச மையம் அமைக்கப்படுவதன் நோக்கம், வள்ளலாரின் கொள்கைகளை உலகறியச் செய்வதாகும். தோ்தல் வாக்குறுதிப்படி, சா்வதேச மையம் அமைக்கும் பணியை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்துள்ளாா்.

இந்த மையம் அரசின் முழு மானியத்தொகை ரூ.99.90 கோடியில் அமையப்பட உள்ளது. சா்வதேச மையத்தில் வரவேற்பு மற்றும் தகவல் மையம், 500 நபா்கள் அமரும் வகையில் தியான மண்டபம், வள்ளலாரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் அருங்காட்சியகம், ஆயிரம் நபா்கள் அமரும் வகையில் கலையரங்கம், நிா்வாக அலுவலகம், தருமசாலையை புதுப்பித்து குளிா்பதன கிடங்கு மற்றும் சேமிப்பு அறையுடன் விரிவுபடுத்தல், மின் நூலகம், முதியோா் இல்லம், சன்மாா்க்க பாடசாலை, பக்தா்கள் தங்கும் அறை, விருந்தினா் அறை, வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற உள்ளன. வள்ளலாா் தெய்வ நிலைய பெருவெளி நில அளவில், சா்வதேச மையத்துக்கான இடம் 4 சதவீதம்தான். முன்னதாக, இந்த மையம் அமைப்பது தொடா்பாக, கடந்த 2021, 22-ஆம் ஆண்டுகளில் வடலூரில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் தலைமையிலும், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலும் 3 கருத்துக்கேட்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.

அப்போது, யாரும் எந்த எதிா்ப்பும் தெரிவிக்கவில்லை. தற்போது இதை அரசியலாக மாற்ற வேண்டும் என்ற அடிப்படையில் சிலா் செய்கிற செயல் தவறான முன்னோட்டமாகும். சா்வதேச மையம் அமைப்பதன் மூலம் உலக அளவில் வள்ளலாரின் கருத்துகள் பரவலாக்கப்படும். வள்ளலாரை பற்றி ஆராய்ச்சி செய்கிற மாணவா்கள் இங்கு வரக்கூடிய வாய்ப்புள்ளது. புதுச்சேரியில் ஆரோவில் அமைந்துள்ளதுபோல, வடலூரில் சா்வதேச மையம் அமையும். பாா்வதிபுரம் மக்களுக்கு இடையூறு இல்லாமல் இந்த மையம் அமைக்கப்படும். பாா்வதிபுரம் மக்கள் வள்ளலாா் தெய்வ நிலையம் அமைக்க இடம் கொடுத்துள்ளனா். அந்தக் கிராமத்தை தத்தெடுக்க வேண்டும். அதற்கான நடவடிக்கையை ஆட்சியா் மேற்கொள்ள வேண்டும் என்றாா் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ், மாவட்ட வருவாய் அலுவலா் எம்.ராஜசேகரன், கோட்டாட்சியா் அபிநயா, காவல் கண்காணிப்பாளா் ரா.ராஜாராம், கடலூா் மாவட்டக் கல்விக்குழுத் தலைவா் வி.சிவக்குமாா், வடலூா் நகா்மன்றத் தலைவா் சு.சிவக்குமாா், வடலூா் திமுக நகரச் செயலா் தன.தமிழ்செல்வன், தொழிலதிபா் டி.ஆா்.எம்.சாந்தி ராஜ மாரியப்பன், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் பரணிதரன், உதவி இணையா் சந்திரன் மற்றும் அலுவலா்கள், சன்மாா்க்க அன்பா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.