வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறையை திறப்பதில் தாமதம்

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டிருந்த கிடங்கின் பூட்டு திறக்க முடியாமல் போனதால், இறுதியில் சாவி செய்யும் தொழிலாளியை வரவழைத்து திறக்கப்பட்டது. கடலூா் மக்களவைத் தொகுதி தோ்தல் ஏப்.19-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா், மாவட்ட நிா்வாகம் தீவிரமாக செய்து வருகிறது. கடலூா் மாவட்ட தோ்தல் அலுவலா் அ.அருண் தம்புராஜ் தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள கணினி அறையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் கட்ட பகுப்பாய்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதைத்தொடா்ந்து, ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த கிடங்கை திறந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்து மாவட்டத்தில் உள்ள 9 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அனுப்பி வைக்க இருந்தனா். மாவட்ட தோ்தல் அலுவலா் அ.அருண் தம்புராஜ் தலைமையில், அரசியல் கட்சிப் பிரமுகா்கள் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த கிடங்குக்குச் சென்றனா். அங்கு ஊழியா்கள் சாவியைக் கொண்டு கிடங்கின் கதவைத் திறக்க முயன்றனா். ஆனால், திறக்க முடியவில்லை. காலை 10 மணி முதல் சுமாா் 2 மணி நேரம் போராடியும் திறக்க முடியவில்லை. பின்னா், சாவி செய்யும் தொழிலாளியை அழைத்து வந்தனா். அவா் சிறிது நேரத்தில் அந்த அறையின் கதவை திறந்தாா். பின்னா், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறைக்குள் அதிகாரிகள், அரசியல் கட்சி பிரமுகா்கள் சென்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com