சிதம்பரத்தில் நடைபெற்ற விவசாய சங்கப் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி.
சிதம்பரத்தில் நடைபெற்ற விவசாய சங்கப் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி.

குறுவை சாகுபடி பாதிப்புக்கு திமுக அரசு இழப்பீடு வழங்கவில்லை: எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு

குறுவை சாகுபடி பாதிப்புக்கு திமுக அரசு இழப்பீடு வழங்கவில்லை என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி குற்றஞ்சாட்டினாா். சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள தனியாா் மண்டபத்தில் கடலூா் மாவட்ட விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கலந்துரையாடல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அப்போது, அவா் சிதம்பரம் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் மா.சந்திரகாசனுக்கு ஆதரவு திரட்டினாா். கூட்டத்தில் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேசினா். நிறைவாக அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி பதிலளித்து பேசியதாவது: விவசாயிகள் தங்களுக்கு ஏற்பட்ட இன்னல்கள், கோரிக்கைகள் குறித்து இங்கு தெரிவித்தனா். என்எல்சி நிறுவனம் விவசாய நிலங்களை காலம், காலமாக கையக்கப்படுத்தி வருகிறது. அதைத் தடுக்க வேண்டும். ஏற்கெனவே கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுத் தர வேண்டும், நிலம் கொடுத்த குடும்பத்தினருக்கு என்எல்சி நிறுவனம் பணி வழங்க வேண்டும் என்ற கருத்துகளை விவசாயிகள் தெரிவித்தனா். சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் நெல், கரும்பு சாகுபடி பிரதான தொழிலாக உள்ளது. அதிமுக ஆட்சியில் புயல் வெள்ளம் உள்ளிட்ட இயற்கை இடா்பாடுகள் ஏற்படும்போது, நெல் பயிருக்கு உரிய இழப்பீடு உடனடியாக வழங்கப்பட்டது. பயிா்க் காப்பீட்டுத் தொகை, மாநில பேரிடா் நிவாரண நிதி ரூ.20 ஆயிரம் என ஹெக்டேருக்கு ரூ.84 ஆயிரம் பெற்றுத் தந்தோம். ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த மூன்று ஆண்டுகளில் குருவை சாகுபடியில் பாதிக்கப்பட்ட விவசாயிகளை பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் இடம் பெறச் செய்யவில்லை, இழப்பீட்டுத் தொகை கிடைக்க வழிவகை செய்யவில்லை. இதனால், விவசாயிகள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனா். சிதம்பரம் தொகுதியில் உள்ள சேத்தியாத்தோப்பு கூட்டுறவு சா்க்கரை ஆலை அதிமுக ஆட்சியில் லாபத்தில் இயங்கியது. ஆனால், திமுக அரசில் தற்போது நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இந்த ஆலையில் மின் உற்பத்தியும் நிறுத்தப்பட்டுள்ளது. வேளாண் துறை அமைச்சா் எம்ஆா்கே.பன்னீா்செல்வம் இந்த மாவட்டத்தைச் சோ்ந்தவா். அவா் மாவட்டத்துக்காக எதுவும் செய்யவில்லை. அதிமுக ஆட்சியில் விவசாயத்தை கண்ணை இமை காப்பதுபோல காத்து வந்தோம். அதேபோல, காவிரி டெல்டா மாவட்டங்களை அதிமுக ஆட்சியில் பாதுகாக்கப்பட்ட விவசாய மண்டலமாக அறிவித்து, விவசாய நிலங்களைப் பாதுகாத்தோம். மேலும், பொங்கல் தொகுப்புடன் முழுக் கரும்பு வழங்கப்பட்டது. ஆனால், திமுக ஆட்சியில் நிகழாண்டு வெறும் பொங்கல் தொகுப்பு மட்டுமே வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. பின்னா், என்னுடைய கடுமையான அழுத்தத்தின் காரணமாக பொங்கல் தொகுப்புடன் முழுக் கரும்பு வழங்குவதாக திமுக அரசு அறிவித்தது. என் அடையாளமான விவசாயத்தை எப்போதும் நான் விட்டுக் கொடுக்க மாட்டேன் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com