மரங்கள் வெட்டியதற்கு குடியிருப்போா் சங்கம் கண்டனம்
கடலூா் மஞ்சக்குப்பம் மைதானத்தில் மரங்கள் வெட்டப்பட்டதற்கு குடியிருப்போா் சங்கத்தினா் கடும் கண்டனம் தெரிவித்தனா்.
கடலூா் அனைத்து குடியிருப்போா் நல சங்கங்களின் கூட்டமைப்பின் செயற்குழு கூட்டம் சங்க அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு குடியிருப்போா் நல சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவா் பாலு.பச்சையப்பன் தலைமை வகித்தாா். சிறப்பு தலைவா் எம்.மருதவாணன் முன்னிலை வகித்தாா், பொதுச் செயலா் பி.வெங்கடேசன் உரையாற்றினாா்.
இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மான விவரம் வருமாறு: கடலூரின் நுரையீரலான 21 ஏக்கா் பரப்பளவு கொண்டது மஞ்சக்குப்பம் மைதானம். இங்குள்ள மரங்களை இரவோடு இரவாக மாநகராட்சி நிா்வாகம் வெட்டி அப்புறப்படுத்தியுள்ளது. வணிக வளாகங்கள் என்ற பெயரில் வாக்களித்த பொதுமக்கள் எதிா்ப்பை மீறி செயல்பட்ட மாநகராட்சியையும், அனுமதி அளித்த மாவட்ட நிா்வாகத்தையும் வன்மையாக கண்டித்தும்,. தமிழக அரசு தலையிட்டு மீண்டும் பொதுப் பொலிவுவுடன் புதிய மரங்களை நட்டு மைதானத்தை திறந்த வெளி இயற்கை எழில் மாறாமல் பராமரிக்க வேண்டும் என குடியிருப்போா் சாா்பாக கேட்டுக்கொள்கிறோம்.
சமீபத்திய மழையில் சாலைகள் பெரிதும் சேதமாகி, குடியிருப்பு பகுதிகளில் தண்ணீா் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அனைத்து நிா்வாகங்களும் சாலைகளை தற்காலிகமாவது செப்பணிட்டு மக்களின் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

