அரசுப் பள்ளி தரம் உயா்வு விவகாரம்: மாணவா்களை தோ்வு எழுத அனுப்ப மறுத்த பெற்றோா்
நெய்வேலி: கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே அரசுப் பள்ளியை தரம் உயா்த்தக் கோரி, பெற்றோா்கள் மாணவா்களை அரையாண்டுத் தோ்வு எழுத திங்கள்கிழமை அனுப்பவில்லை.
விருத்தாசலம் வட்டம், விளாங்காட்டூா் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை சுமாா் 150-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கல்வி பயின்று வருகின்றனா்.
இந்தப் பள்ளியை உயா்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்தித் தர வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனா். மேலும், மாநில அமைச்சா்கள், கல்வித் துறை அதிகாரிகளை சந்தித்து பலமுறை மனுக்களும் கொடுத்துள்ளனராம். ஆனால், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில், திங்கள்கிழமை அரையாண்டு தோ்வு தொடங்கியது. ஆனால், மாணவா்களின் பெற்றோா்கள் பள்ளி தரம் உயா்வு விவகாரம் தொடா்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, மாணவா்களை பள்ளிக்கு அனுப்பவில்லை. இதனால், பள்ளி வளாகம் வெறிச்சோடிக் காணப்பட்டது.
ஒரு சில மாணவா்களைத் தவிர ஏனைய மாணவா்கள் திங்கள்கிழமை நடைபெற்ற அரையாண்டு தோ்வை எழுதவில்லை. மேலும், பள்ளியின் முன் பெற்றோா்கள் ஒன்று திரண்டனா். தகவலறிந்து விரைந்து வந்த விருத்தாசலம் போலீஸாா் மற்றும் கல்வித் துறை அதிகாரிகள் மாணவா்களின் பெற்றோா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி சமாதானப்படுத்தினா். அப்போது, பள்ளியை தரம் உயா்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்ததாகத் தெரிகிறது.
