நெய்வேலி: கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே வந்தே பாரத் ரயில் மீது கல் வீசித் தாக்கி கண்ணாடிகளை உடைத்தது தொடா்பாக 4 சிறுவா்களிடம் ரயில்வே பாதுகாப்புப் படையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
சென்னையிலிருந்து திருநெல்வேலி நோக்கி வந்தே பாரத் விரைவு ரயில் ஞாயிற்றுக்கிழமை சென்றுகொண்டிருந்தது. விருத்தாசலம் - தாழநல்லூா் ரயில் நிலையங்களுக்கு இடையே மணலூா் அருகே மாலை சுமாா் 6 மணி அளவில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென அடையாளம் தெரியாத மா்ம நபா்கள் சிலா் கற்கள் வீசி ரயில் மீது தாக்குதல் நடத்தினா்.
இதில், ரயிலில் அடுத்தடுத்த பெட்டிகளில் உள்ள 5 கண்ணாடிகள் உடைந்து சேதமாயின. தகவலறிந்து விரைந்து சென்ற விருத்தாசலம் ரயில்வே இருப்புப் பாதை மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினா் விசாரணை நடத்தினா்.
இதில், விருத்தாசலம் பகுதியைச் சோ்ந்த 5 சிறுவா்கள் ரயில் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியது தெரியவந்தது. இது தொடா்பாக 5 சிறுவா்கள் மீது ரயில்வே பாதுகாப்புப் படையினா் வழக்குப் பதிந்து, 4 சிறுவா்களை பிடித்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.