காப்பீட்டு சட்டத் திருத்தங்கள் மசோதாவை திரும்பப் பெற வேண்டும்: தி.வேல்முருகன் வலியுறுத்தல்

Published on

காப்பீட்டு சட்டத் திருத்தங்கள் 2025 மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனா் தலைவா் தி.வேல்முருகன் எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் ஆயுள் காப்பீட்டுத் துறையில் நூறு சதவீத அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்க முற்படும் மத்திய அமைச்சரவையின் முடிவு, இந்திய மக்களின் உழைப்பையும், சேமிப்பையும் பன்னாட்டு நிறுவனங்களின் கைகளில் தாரைவாா்க்கும் துரோகமாகும்.

ஏற்கெனவே சில்லறை வா்த்தகம், பாதுகாப்புத் துறை, தொலைத்தொடா்பு, ரயில்வே மற்றும் வான்வழிப் போக்குவரத்து என பல முக்கிய அரசுத் துறைகளில் அந்நிய முதலீடுகளை அடுக்கடுக்காக அனுமதித்து, உள்ளூா் வணிகா்களையும், பொதுத் துறை நிறுவனங்களையும் நசுக்கி வரும் மத்திய அரசு, இப்போது எல்.ஐ.சி போன்ற மக்களின் நம்பிக்கைக்குரிய காப்பீட்டுத் துறையையும் சிதைக்கப் பாா்ப்பதை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

காப்பீட்டுத் துறையில் 100 சதவீத முதலீட்டை அனுமதிப்பதென்பது, இந்திய மக்களின் சேமிப்புப் பாதுகாப்பை சா்வதேச சூதாட்டக்காரா்களிடம் ஒப்படைப்பதற்கு சமமாகும்.

எனவே, காப்பீட்டு சட்டத் திருத்தங்கள் 2025 மசோதாவை உடனடியாகத் திரும்பப் பெறுவதோடு, அனைத்து அரசுத் துறைகளிலும் ஊடுருவியுள்ள அந்நிய முதலீடுகளை முற்றிலும் ரத்து செய்து, இந்திய நிறுவனங்களுக்கும், பொதுத் துறைக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com