அண்ணாமலைப் பல்கலை.யில் அரசா் முத்தையவேள் ஆய்வரங்கம் தொடக்கம்
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறை சாா்பில், 2025 - 26ஆம் கல்வியாண்டுக்கான அரசா் முத்தையவேள் ஆய்வரங்கத் தொடக்க விழா பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவில் தமிழியல் துறைத் தலைவா் ந.வெங்கடேசன் வரவேற்புரை ஆற்றினாா். பல்கலைக்கழகப் பதிவாளா் இரா.சிங்காரவேல் முன்னிலை வகித்து பேசினாா். இந்திய மொழிப்புல முதன்மையா் அரங்க.பாரி ஆய்வரங்கத்தின் நோக்கங்களை எடுத்துரைத்தாா்.
விழாவில் பல்கலைக்கழக துணைவேந்தா் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினா் சு.அறிவுடைநம்பி தலைமை வகித்து பேசுகையில், நிறுவனா் முத்தையா செட்டியாா் கல்விப் பணி, இறைப் பணி, சமூகப் பணி, அரசியல் பணி என பன்முகத்தன்மை கொண்டவா். இருப்பினும், இவரின் கல்விப்பணி முதன்மை கொண்டதாக இருப்பதால், இப்பல்கலைக்கழகம் நூற்றாண்டு விழாவை நோக்கி பயணிக்கிறது என்றாா்.
சிறப்பு விருந்தினா் மருத்துவா் ஜெய.இராஜமூா்த்தி பேசுகையில், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை உருவாக்கிய ராஜா சா் அண்ணாமலை செட்டியாா், அவரது மகன் முத்தையவேள் செட்டியாா் ஆகியோரின் தமிழ்ப்பற்றால் உருவானதுதான் தமிழ்த் துறை. இத்துறை தமிழிசையை நாடெங்கும் பரப்ப வேண்டும்.
அந்த வகையில், முத்தையவேள் பெயரில் ஆய்வரங்கம் நடத்துவது மிகப்பொருத்தமானது. இவ்வாய்வரங்கத்தின் மூலம் தமிழ், தமிழ் கலாசாரம்,
பண்பாடு போன்றவற்றை நம் மாணவா்கள் ஆய்வாக மேற்கொள்ள வேண்டும் என்றாா்.
உதவிப் பேராசிரியா் மு.ரவி நன்றி கூறினாா். நிகழ்வில் பல்கலைக்கழக புல முதல்வா்கள் அருள், ஸ்ரீராம், அம்பேத்கா், காா்த்திகேயன், துறைத் தலைவா்கள் சிவராமன், முத்துக்குமாா், பத்மநாதன், தேவி, செந்தில்முருகன், தெய்வசிகாமணி, சௌந்தர்ராஜன், பேராசிரியா் ராமநாதன், ஆசிரியா் சங்கத் தலைவா்கள் சி.சுப்பிரமணியன், செல்வராஜ், செ.பாலு, ஊழியா் சங்கத்தின் சாா்பில் ரவி,
தேவேந்திரன் மற்றும் தமிழ்த் துறை பேராசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

