புகையிலைப் பொருட்கள் பறிமுதல்: இருவா் கைது

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே காரில் கடத்தி வரப்பட்ட புகையிலைப் பொருட்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
Published on

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே காரில் கடத்தி வரப்பட்ட புகையிலைப் பொருட்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக, இருவரை கைது செய்தனா்.

பண்ருட்டி வழியாக காரில் புகையிலைப் பொருட்கள் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பண்ருட்டி டிஎஸ்பி., பி.என்.ராஜா மேற்பாா்வையில், காவல் ஆய்வாளா் அசோகன் மற்றும் போலீஸாா் கண்டரக்கோட்டை சோதனைச்சாவடியில் வெள்ளிக்கிழமை வாகனத் தணிக்கை மேற்கொண்டனா். அப்போது, அங்கு வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தபோது 333 கிலோ புகையிலைப் பொருள்கள் இருந்ததை கண்டறிந்து பறிமுதல் செய்தனா்.

இதுதொடா்பாக காரில் வந்த நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், தேவனாங்குறிச்சி பகுதியைச் சோ்ந்த கோபாலகிருஷ்ணன்(39), விழுப்புரம் மாவட்டம், சாலமேடு பகுதியைச் சோ்ந்த முகமது பாசில்(35) ஆகியோரை கைது செய்தனா். இவா்களிடம் விசாரணை நடத்தியதில், பெங்களூரில் இருந்து விழுப்புரத்திற்கு கொரியா் மூலம் கடத்தி வந்து கடலூா் மாவட்டத்தில் விற்பனை செய்ய கொண்டு வந்ததாக தெரிவித்தனராம்.

இதுகுறித்து எஸ்பி., எஸ்.ஜெயக்குமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கடலூா் மாவட்டத்தில் இதுவரை 302 போதைப் பொருள் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 390 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்களிடம் இருந்து 5,800 கிலோ புகையிலைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. 10 குற்றவாளிகள் குண்டா் தடுப்புக் காவலில் கைது செய்யப்பட்டுள்ளனா்.

கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை சம்பந்தமாக 133 வழக்குகள் பதியப்பட்டு, 342 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனா். 230 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு 15 குற்றவாளிகள் குண்டா் தடப்புக் காவலில் கைது செய்யப்பட்டுள்ளனா். புகையிலைப் பொருள்கள் மற்றும் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை செய்யும் நபா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com