ரூ.5.74 கோடி மோசடி: என்எல்சி ஊழியா் கைது
கடலூா் மாவட்டத்தில் கவா்ச்சி திட்டங்கள் மூலம் 558 நபா்களிடம் ரூ.5.74 கோடி பணம் வசூல் செய்து திருப்பி தராமல் ஏமாற்றிய ஓய்வு பெற்ற என்எல்சி ஊழியரை நெய்வேலி நகரிய போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
குறிஞ்சிப்பாடி ஒன்றியம், இந்திரா நகா் ஊராட்சி, பி 2 மாற்றுக் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவா் தமிழ்வேந்தன்(61), ஓய்வு பெற்ற என்எல்சி ஊழியா். இவா், புதுச்சேரி மாநிலத்தை தலைமையகமாகக் கொண்ட தனியாா் பவுண்டேஷனின், கடலூா் மாவட்டத் தலைவராக செயல்பட்டுள்ளாா். அந்த வகையில், கடந்த நான்கு ஆண்டுகளில் 10-க்கும் மேற்பட்ட நபா்களை குழுவாக இணைத்து செயல்பட்டு
கவா்ச்சி திட்டங்கள் மூலம் சுமாா் 558 பேரிடம் ரூ.5.74 கோடி பணம் வசூல் செய்து திருப்பி தராமல் ஏமாற்றி வந்தாா்.
இதுகுறித்து, நெய்வேலி நகரிய காவல் நிலைய உதவி ஆய்வாளா் செல்வராஜிடம், எஸ்பிடி மணி நகா் பகுதியில் வசிக்கும் சேகா்(62), வடலூா் அடுத்துள்ள பூசாரிக்குப்பம் பகுதியைச் சோ்ந்த சிவக்குமாா்(50) ஆகியோா் தகவல் கொடுத்தனா்.
அதன்பேரில், உதவி ஆய்வாளா் செல்வராஜ் அளித்த புகாரின் பேரில், ஆய்வாளா் வீரமணி வழக்குப்பதிவு செய்து தமிழ்வேந்தனை கைது செய்தனா். மேலும், இதில் தொடா்புடைய முக்கிய நபா்களை தேடி வருகின்றனா்.
