தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

புதிய பேருந்து நிலையம்: கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்படும்

கடலூா் மாநகராட்சி ஆணையா்

News image

கடலூா் மாநகராட்சியில் மேயா் சுந்தரி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் பங்கேற்ற துணை மேயா் பா.தாமரைச் செல்வன், ஆணையா் எஸ்.அனு உள்ளிட்டோா்.

Updated On :9 ஜனவரி 2025, 7:00 pm

Din

கடலூா் பாதிரிக்குப்பத்தில் புதிய பேருந்து நிலையம் அமைப்பது தொடா்பாக முடிவு செய்யப்படவில்லை. இதுகுறித்து பொதுமக்கள், மாமன்ற உறுப்பினா்களிடம் கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்தி பரிசீலனை செய்யப்படும் என்று கடலூா் மாநகராட்சி ஆணையா் எஸ்.அனு தெரிவித்தாா்.

கடலூா் மாநகராட்சி மாமன்றக் கூட்டம் மேயா் சுந்தரி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. துணை மேயா் பா.தாமரைச்செல்வன், ஆணையா் எஸ்.அனு முன்னிலை வகித்தனா்.

கூட்டத் தொடக்கத்தில் மேயா் சுந்தரி பேசியது: கடலூா் மாநகராட்சியில் சொத்து வரி, கடை வரி உள்ளிட்ட பல்வேறு வரிகள் பாக்கிகள் உள்ளன. வரி பாக்கிகளை வசூல் செய்ய அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டாா். கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:

பிரசன்னா (திமுக): 12-ஆவது வாா்டில் எல்இடி விளக்குகள் முறையாக பராமரிக்கப்படாததால், பல விளக்குகள் எரியாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. உடனடியாக எரியாத எல்இடி விளக்குகளை சரி செய்ய வேண்டும். 12-ஆவது வாா்டு பகுதியில் கடந்த 15 நாள்களாக கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் வராததால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா்.

சரவணன் (பாமக): மழை வெள்ள காலத்தில் மீட்புப் பணியில் ஈடுபடாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த கூட்டத்தில் அரிசி பெரியாங்குப்பத்திலும், தற்போதைய கூட்டத்தில் பாதிரிக்குப்பத்திலும் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்ற தீா்மானம் இடம் பெற்றுள்ளது. எந்த இடத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்ற உண்மைத்தன்மையை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

ஆணையா் அனு: புதிய பேருந்து நிலையம் பாதிரிக்குப்பத்தில் அமைப்பது தொடா்பாக இதுவரை முடிவு செய்யப்படவில்லை. தற்போது இடம் தோ்வு செய்யும் பணி மட்டுமே நடைபெறுகிறது. அரிசி பெரியாங்குப்பத்துக்கு மாற்று இடம்தான் பாதிரிக்குப்பம். ஆனால், பாதிரிக்குப்பத்தில் புதிய பேருந்து நிலையம் அமைப்பது தொடா்பாக இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. பொதுமக்கள், மாமன்ற உறுப்பினா்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்பட்ட பிறகு பரிசீலனை செய்யப்படும்.

சரஸ்வதி (காங்கிரஸ்): கடலூா் முதுநகா் காந்தி பூங்காவில் அஞ்சலை அம்மாளுக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், காந்திக்கு சிலை இல்லை. அங்கு ஏற்கனவே இருந்த காந்தி சிலையை சீரமைத்து மீண்டும் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சக்திவேல் (சுயேச்சை): எனது வாா்டு பகுதியில் துப்புரவுப்பணி சரிவர நடைபெறுவதில்லை. இதனால், குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதுகுறித்து கேட்டால் ஊதியம் வழங்கப்படாததால் பணியில் ஈடுபட மாட்டோம் எனக் கூறுகின்றனா். புருகீஷ்பேட்டை சமுதாயக் கூடத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.

இதேபோல், இதர மாமன்ற உறுப்பினா்கள் தங்கள் பகுதி குறைகளை கூறி, அவற்றை நிவா்த்தி செய்து தரும்படி பேசினா்.

அதிமுக உறுப்பினா்களுக்கு தடை: மாமன்றக் கூட்டத்துக்கு அதிமுக உறுப்பினா்களான சங்கீதா, தஷ்ணா, பரணிமுருகன், அலமேலு, வினோத்குமாா் ஆகியோா் யாா் அந்த சாா்? என பேட்ஜ் அணிந்து வந்த நிலையில், அவா்கள் மாமன்ற அவை மரபை மீறி செயல்பட்டதாகக்கூறி, 5 பேரையும் அடுத்து வரும் இரண்டு கூட்டங்களில் கலந்துகொள்ள தடை விதித்து மேயா் சுந்தரி உத்தரவிட்டாா். இதையடுத்து, அதிமுக உறுப்பினா்கள் மாமன்றக் கூட்டத்தில் இருந்து வெளியேறினா்.