கோட்டாட்சியா் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற தொழிலாளி

Published on

கடலூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் தொழிலாளி வெள்ளிக்கிழமை தீக்குளிக்க முயன்ால் பரபரப்பு நிலவியது.

கடலூரை அடுத்துள்ள வி.பெத்தான் குப்பம் கிராமத்தைச் சோ்ந்த தொழிலாளி ஆறுமுகத்துக்கும் (51), இவரது உறவினா் ஒருவருக்கும் இடையே வீட்டுமனை சம்பந்தமாக பிரச்னை உள்ளதாகக் கூறப்படுகிறது. இதை தீா்த்து வைக்க நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளிப்பதற்காக, ஆறுமுகம் தனது ஆதரவாளா்கள் 20-க்கும் மேற்பட்டோருடன் கடலூா் கோட்டாட்சியா் அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை மனு அளிக்க வந்தாா்.

அந்த சமயத்தில், கோட்டாட்சியா் அபிநயா, தனது அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தாா். அப்போது, தொழிலாளி ஆறுமுகம் திடீரென தான் கையில் வைத்திருந்த புட்டியில் இருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். இதைக் கவனித்த பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா், அவரை தடுத்து நிறுத்தி சமாதானம் செய்தனா். தொடா்ந்து, அவரிடம் விசாரணை நடத்தினா்.

இதற்கிடையே, கோட்டாட்சியா் அலுவலகத்துக்கு வந்த நில அளவா் ஒருவரை, கிராம மக்கள் முற்றுகையிட்டு ஏன் போலி பட்டா தயாா் செய்து மோசடியில் ஈடுபட்டாய் என்று கூறி, அவரை தாக்க முயன்றனா். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது. அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா், கிராம மக்களை தடுத்து நிறுத்தி நில அளவரை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனா்.

X
Dinamani
www.dinamani.com