தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நிலங்களை என்எல்சி கையகப்படுத்த எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதம்

கிராம மக்கள் வியாழக்கிழமை அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

வாணாதிராயபுரம் ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரில் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.

Updated On :23 ஜனவரி 2025, 6:57 pm

Din

கடலூா் மாவட்டம், நெய்வேலி அருகே உள்ள வாணாதிராயபுரம் ஊராட்சிக்குள்பட்ட நிலங்களை என்எல்சி நிா்வாகம் கையகப்படுத்த எதிா்ப்புத் தெரிவித்து, அந்தக் கிராம மக்கள் வியாழக்கிழமை அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நெய்வேலியை அடுத்துள்ள வாணாதிராயபுரம் ஊராட்சியில் சுமாா் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். இந்த ஊராட்சி அருகில் என்எல்சி நிறுவனத்தின் முதலாவது சுரங்கம் 1ஏ அமைந்துள்ளது.

நிலக்கரி வெட்டி எடுப்பதற்கு வாணாதிராயபுரம் ஊராட்சியை என்எல்சி நிறுவனம் கையகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, இந்தக் கிராம மக்கள் பல ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.

வீடு, நிலங்களை கையகப்படுத்த என்எல்சி நிறுவனம், வருவாய்த் துறை அலுவலா்கள் வியாழக்கிழமை வரவுள்ளதாகக் கிடைத்த தகவல் அடிப்படையில், வாணாதிராயபுரம் கிராம மக்கள் ஒருங்கிணைந்து ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரில் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, என்எல்சி நிறுவனம் வாணாதிராயபுரம் ஊராட்சி மக்களின் கருத்தைக் கேட்காமல் நிலங்களை அளவீடு செய்யக் கூடாது என வலியுறுத்தி முழக்கமிட்டனா். போராட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரமுகா்கள் உள்ளிட்டோரும் கலந்துகொண்டு கிராம மக்களுக்கு ஆதரவு தெரிவித்தனா்.

இதனிடையே, போராட்டம் நடைபெறும் இடத்துக்கு வந்த நெய்வேலி டிஎஸ்பி சபியுல்லா, காவல் ஆய்வாளா் சுதாகா் தலைமையிலான போலீஸாா் தற்போது என்எல்சி தரப்பில் நிலம் கையகப்படுத்துவதற்கான எந்த முகாந்திரமும் இல்லை என தெரிவித்ததைத் தொடா்ந்து, கிராம மக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் காங்கிரஸ் மேற்கு மாவட்டச் செயலரும், போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளருமான ஜெயம் ஜெகதீசன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் ஆறுமுகம், தவாக நிா்வாகி இலக்குவன், தேமுதிகவைச் சோ்ந்த சிவக்குமாா், பாமக இளைஞரணிச் செயலா் சரவணன் மற்றும் பல்வேறு கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.