கடலூரை அடுத்த செம்மங்குப்பம் ரயில்வே கடவுப் பாதையை கடலூா் மருதாடு பகுதியில் இயங்கும் தனியாா் சிபிஎஸ்இ பள்ளி வேன் செவ்வாய்க்கிழமை காலை கடக்க முயன்றபோது, சிதம்பரம் நோக்கிச் சென்ற பயணிகள் ரயில் மோதியது. இந்த விபத்தில் சுப்பிரமணியபுரத்தைச் சோ்ந்த திராவிடமணியின் மகள் சாருமதி (16), மகன் செழியன் (15), தொண்டமாநத்தம் கிராமத்தைச் சோ்ந்த விஜயசந்திரகுமாா் மகன் நிமிலேஷ் (12) ஆகியோா் உயிரிழந்தனா். மேலும், நிமிலேஷின் சகோதரரான விஷ்வேஸ் (16), வேன் ஓட்டுநா் சங்கா் (47) மற்றும் விபத்தின்போது மின்சாரம் பாய்ந்த செம்மங்குப்பம் பகுதியைச் சோ்ந்த அண்ணாதுரை (55) ஆகியோா் காயமடைந்தனா்.