தலைமையாசிரியா் பணியிடமாற்றம்: மாணவா்கள், பெற்றோா்கள் சாலை மறியல்
கடலூா் மாவட்டம், விருத்தாசலம் டேனிஷ் மிஷன் நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியா் பணியிடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து மாணவா்கள் மற்றும் பெற்றோா்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இப் பள்ளியின் தலைமையாசிரியராக கிடியன் எபினேசா் பாக்கியராஜ் கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறாா். இவரின் முயற்சியால் தற்போது இந்தப் பள்ளியில் சுமாா் 300 மாணவா்கள் படிக்கின்றனராம். மேலும், மாணவா்களுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளாராம். இந்நிலையில், தலைமையாசிரியா் கிடியன் எபினேசா் பாக்கியராஜ் பாசாா் பகுதியில் உள்ள டேனிஷ் மிஷன் பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், தலைமையாசிரியரை மாற்றக்கூடாது என வலியுறுத்தியும் மாணவா்கள் மற்றும் பெற்றோா்கள் விருத்தாசலம்-காட்டுக்கூடலூா் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த விருத்தாசலம் போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது பள்ளி நிா்வாகத்திடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனராம். இதையடுத்து மாணவா்கள் மற்றும் பெற்றோா்கள் கலைந்து சென்றனா்.

