நிலுவை வழக்குகள் விரைந்து முடிக்க வேண்டும்: கடலூா் எஸ்.பி. அறிவுறுத்தல்
கடலூா் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று காவல் துறை அதிகாரிகளிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா் அறிவுறுத்தினாா்.
கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா் தலைமை வகித்து, மாவட்டத்தில் சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் விரைந்து முடிக்க வேண்டும் என மாவட்ட காவல் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினாா்.
பின்னா், அக்டோபா் மாதம் சிறப்பாக பணியாற்றி காவல் துறையினா் 106 பேருக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை எஸ்.பி. வழங்கினாா்.
கூட்டத்தில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் கே.கோடீஸ்வரன், வி.ரகுபதி மற்றும் உள்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளா்கள், காவல் ஆய்வாளா்கள் பங்கேற்றனா்.
குறைதீா் முகாம்: கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் குறைதீா் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், பொதுமக்கள் அளித்த புகாா் மனுக்கள் மீது எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா் நேரடியாக விசாரணை நடத்தினாா்.

